என் மலர்
புதுச்சேரி

கேள்வித்தாள் மாற்றி கொடுத்ததால் தேர்வு ஒத்திவைப்பு: மாணவர்கள் ஏமாற்றம்

- மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது.
- மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்லைக்கழகத்தின் கீழ் தாகூர் கலைக்கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
தேசிய கல்விக் கொள்கைபடி இந்த கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கேள்வித்தாள்கள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் மொழிப்பாடம் (தமிழ், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு) தேர்வு நடந்தது. இதற்காக மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்வு எழுத வந்தனர்.
இந்த நிலையில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு முதல் செமஸ்டருக்கான பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இல்லாமல் 2-ம் ஆண்டு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கேள்வித்தாள் மாறி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் தேர்வு அறையில் உள்ள பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் கல்லூரி நிர்வாகம் மூலமாக பல்கலைக்கழகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் முதல் நாள் தேர்வை ரத்து செய்வதாகவும். இந்த தேர்வு தேதி குறிப்பிட்டு மற்றொரு நாள் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
முதல் நாளில் தேர்வு எழுத வந்த புதுச்சேரி, காரைக்கால் பகுதியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.