search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    என்.ஆர்.ஐ. போலி ஆவண வழக்கு- ஆந்திரா, தமிழகத்தை சேர்ந்த 5 ஏஜெண்டுகள் கைது
    X

    என்.ஆர்.ஐ. போலி ஆவண வழக்கு- ஆந்திரா, தமிழகத்தை சேர்ந்த 5 ஏஜெண்டுகள் கைது

    • சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
    • மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஒரு அரசு மருத்துவ கல்லூரி, 3 சுய நிதி மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) மற்றும் என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் 116 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

    இந்த இடங்களில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களின் உறவினர்களின் குழந்தைகள் ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறலாம்.

    இந்த என்.ஆர்.ஐ. ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் குறைந்த நீட் மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள், ஏஜெண்டுகள் மூலம் போலியான வெளிநாட்டு தூதரகங்களின் கடிதம் அளித்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கை பெற்றனர்.

    என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 73 மாணவர்கள் போலியான தூதரக ஆவணங்கள் சமர்ப்பித்தது தெரிய வந்தது. இந்த மோசடி தொடர்பாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் புதுச்சேரி லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட 73 மாணவர்களையும் போலீசார் வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆந்திரா மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏஜெண்டுகள்கள் தூதரக கடிதங்களை போலியாக தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த மெட்டி சுப்பாராவ் (வயது50), தமிழ்நாடு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பூமிநாதன் என்ற ஜேம்ஸ் (48), செல்வகுமார் (43), கார் லோஸ் சாஜிவ் (45,) வசந்த் என்ற விநாயகம் (42) ஆகிய 5 ஏெஜண்டுகளை கைது செய்து போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இதில் தொடர்புடைய மேலும் பல ஏஜெண்டுகளை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே இந்த ஏஜெண்டுகள் புதுச்சேரி மட்டுமல்லாது பல மாநில மாணவர்களுக்கும் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் வழங்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

    இதனால் இந்த வழக்கு அகில இந்திய அளவிலான மோசடிக்கு அச்சாரமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×