search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆட்சியாளர்களுடன் இணக்கம்- புதுச்சேரியில் கவர்னரை வாழ்த்தி போஸ்டர்
    X

    ஆட்சியாளர்களுடன் இணக்கம்- புதுச்சேரியில் கவர்னரை வாழ்த்தி போஸ்டர்

    • புதுவை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உதவும்படி கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பாடு அமைந்துள்ளது.
    • அமைதியான முறையில் கவர்னரின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.

    புதுச்சேரி:

    சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக புதுச்சேரி இருந்தாலும், புதுச்சேரி அரசு என்றால் அது கவர்னரைத்தான் குறிக்கும்.

    கவர்னருக்கு ஆலோசனை சொல்லும் அவையாகத்தான் சட்டமன்றம் விளங்குகிறது. இதனால் சட்டமன்றத்தில் முடிவு எடுத்தாலும், கவர்னரின் அனுமதி பெற்றுத்தான் திட்டங்களையும், சட்டங்களையும் நிறைவேற்ற முடியும். இதனால்தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

    இத்தனை அதிகாரங்கள் இருந்தாலும், புதுச்சேரிக்கு வரும் பெரும்பாலான கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளில் தலையிடுவதில்லை. அரசின் திட்டங்களுக்கு அனுமதி அளித்து வந்தனர். இருப்பினும் ஒரு சில கவர்னர்கள் தங்களின் அதிகாரத்தை வெளிப்படுத்தினர்.

    அப்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் உருவாகும். இதுபோலத்தான் 2016-ம் ஆண்டு நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசுக்கும், அப்போதைய கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    அரசின் பல திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் அரசு நிர்வாகமே அதிகாரிகள் இரண்டாக பிரிந்ததால் ஸ்தம்பித்தது. கவர்னர் மாளிகை முன்பு கருப்பு சட்டை அணிந்து முதலமைச்சராக இருந்த நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    இதன் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி பதவியேற்றது. அப்போது புதுச்சேரி பொறுப்பு கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தார்.

    தமிழிசை அரசுக்கு சாதகமாக செயல்பட்டாலும், அவர் நேரடியாக மக்களை சந்திப்பது, குறைகேட்பது, நிர்வாகத்தில் தலையிடுவது என்பது ஆட்சியாளர்களுக்கு அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியது.

    புதிய சட்டசபை, இலவச அரிசி உட்பட திட்டங்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுப்பியதால் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது.

    இதையடுத்து தேர்தலில் போட்டியிட கவர்னர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்தார். இதன்பின் பொறுப்பு கவர்னராக குறுகிய காலம் சி.பி.ராதாகிருஷ்ணன் இருந்தார்.

    தொடர்ந்து பிரதமர் மோடியுடன் நேரடியாக தொடர்பில் உள்ள கைலாஷ்நாதன் புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் மத்திய அரசில் செல்வாக்கு மிக்கவர் என்பதால், ஆட்சியாளர்களிடம் அச்ச உணர்வு இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக, தனது செல்வாக்கை புதுவை ஆட்சியாளர்களுக்கும், மக்களுக்கும் உதவும்படி கவர்னர் கைலாஷ்நாதன் செயல்பாடு அமைந்துள்ளது.

    மீண்டும் வழங்கவே முடியாது என்ற நிலையில் இருந்த இலவச அரிசி திட்டத்துக்கு மத்திய அரசிடம் பேசி, கவர்னர் கைலாஷ்நாதன் ஒப்புதல் பெற்று தந்துள்ளார். அதேபோல தீபாவளி பண்டிகைக்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை, பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரமாக சம்பளம் உயர்வு, அரசின் காலி பணியிடங்களை நிரப்ப ஆக்ஷன் பிளான், புதிய சட்டசபை வளாகம் என அமைதியான முறையில் கவர்னரின் அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.

    இது புதுவை ஆட்சியாளர்களிடையும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வரவேற்பை வெளிப்படுத்தும்விதமாக கவர்னர் கைலாஷ்நாதனை வாழ்த்தியும், பாராட்டியும் புதுச்சேரி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    தங்கள் அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்திய புதுச்சேரி கவர்னர்கள் சேத்திலால், சந்திராவதி, மல்கானி ஆகியோர் புதுச்சேரி மக்களின் அன்பை பெற்றவர்கள்.

    அவர்கள் வரிசையில் கவர்னர் கைலாஷ்நாதனும் இடம்பெறும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

    Next Story
    ×