என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மின்கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் பந்த்- பஸ், ஆட்டோ ஓடவில்லை
- புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்துள்ளது.
- புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பஸ் போக்குவரத்து முடங்கியது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்துறையின் வரவு, செலவு திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையை சரிக்கட்டும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படும்.
புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டிலும் புதுச்சேரி அரசின் மின்துறை ஒழங்குமுறை ஆணையத்திடம் வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்து, சுமார் ரூ.120 கோடி பற்றாக்குறையை சரிகட்ட மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரியது.
இதன்பேரில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்தது. வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும்.
இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதாலும், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பாலும் அறிவிக்கப்பட்ட மின் கட்டணம் அமல்படுத்தப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டது.
தேர்தலுக்கு பிறகு ஜூன் 16-ந் தேதி முன் தேதியிட்டு மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அரசு அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி ஊர்வலம் நடந்தது.
இதைத்தொடர்ந்து முதல் 200 யூனிட்களுக்கு ரூ.85 பைசா அரசு மானியம் வழங்குவதாக அறிவித்தது. ஆனாலும் மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. சட்டப்படி மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதை மாற்றும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகளான 'இந்தியா கூட்டணி' மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இன்று மாநிலம் தழுவிய 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. 'பந்த்' போராட்டத்துக்கு ஆதரவு தரும்படி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், பஸ், டெம்போ, ஆட்டோ உரிமையாளர்கள், மார்க்கெட் வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
இதன்படி இன்று காலை 6 மணிக்கு 'பந்த்' போராட்டம் தொடங்கியது. 'பந்த்' போராட்டத்தையொட்டி அதிகாலை முதல் புதுச்சேரியில் தனியார் பஸ்கள் முற்றிலுமாக ஓடவில்லை.
புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால், பஸ் போக்குவரத்து முடங்கியது. இதனால் பஸ் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பெரும்பாலான டெம்போ, ஆட்டோக்கள் ஓடவில்லை. இருப்பினும் ஒரு சில ஆட்டோ, டெம்போக்கள் ஓடியது. கல்லூரி பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது. மாணவர்கள் வழக்கம்போல கல்லூரிகளுக்கு சென்றனர்.
புதுச்சேரியிலிருந்து இயங்கும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளான கன்னிய கோவில், கோரிமேடு, கனக செட்டிகுளம் பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கினர்.
ஒரு சில தமிழக அரசு பஸ்கள் மட்டும் புதுச்சேரி வந்து சென்றது. பஸ்கள் இயக்கப்படாததால் புதுச்சேரி தற்காலிக பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது. புதுச்சேரி அரசு பஸ்கள் ஒரு சில இயக்கப்பட்டது. இதில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த பஸ்களில் பயணிகள் ஏறி மாநில எல்லைக்கு சென்று வெளியூர் சென்றனர்.
'பந்த்' போராட்டத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், அரசே 1 முதல் 8-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்தது.
அதே நேரத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வழக்கம்போல பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மாணவர்கள் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நகரத்தின் பிரதான பஜார் வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, புஸ்சிவீதி, மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. வில்லியனூர், பாகூர், தவளக்குப்பம், அரியாங்குப்பம், சேதராப்பட்டு, திருக்கனூர், திருபுவனை, மதகடிப்பட்டு உள்பட புறநகர், கிராமப் புறங்களிலும் இதே நிலை நீடித்தது.
தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. கடலூர் சாலையில் வணிக வளாகம் திறக்கப்படவில்லை. தட்டாஞ்சாவடி, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. பெரிய மார்க்கெட் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறிய மார்க்கெட்டுகள் இயங்கவில்லை.
ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 'பந்த்' போராட்டத்தையொட்டி நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடைகள் திறக்கப்படாததாலும், பஸ்கள் ஓடாததாலும் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராஜீவ்காந்தி சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம், வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கம், மறைமலை அடிகள் சாலை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்