என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் வாஷிங் மெஷின் பழுது பார்க்க சென்ற வீட்டில் நகை திருடிய வாலிபர்

- கடை ஊழியர் பிரதீப் நகையை திருடி சென்றது பதிவாகி இருந்தது.
- பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி குயவர்பாளையம் சுந்தர மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது82). இவர் வீட்டில் அவரது மனைவியுடன் வசித்து வருகிறார்.
சமீபத்தில் இவர்கள் புதிதாக வாங்கிய வாஷிங் மெஷின் திடீரென பழுதானது. உடனே கோதண்டபாணி வாஷிங் மெஷின் வாங்கிய கடைக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
உடனடியாக அந்த கடையில் மெக்கானிக்காக வேலை பார்க்கும் முத்தியால்பேட்டை பொன்னியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பிரதீப் (28) அனுப்பி வைக்கப்பட்டார். வாஷிங் மெஷினை பழுது பார்த்த பிரதீப் பழுது நீக்கி விட்டதாக கோதண்ட பாணியிடம் தெரிவித்து விட்டு அந்த வீட்டில் இருந்து வேக வேகமாக புறப்பட்டு சென்றார்.
அவர் சென்ற பின் பூஜை அறையில் வைத்திருந்த 3 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதனை கண்ட கோதண்டபாணி அதிர்ச்சியடைந்தார். கடை ஊழியர் பிரதீப் நகையை திருடி சென்றிருக்கலாம் என கோதண்டபாணி சந்தேகமடைந்தார்.
இது குறித்து அவர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கடை ஊழியர் பிரதீப் நகையை திருடி சென்றது பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் பிரதீப்பை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை திருடி சென்றதை பிரதீப் ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து பிரதீப்பை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகையை பறிமுதல் செய்தனர்.