என் மலர்
புதுச்சேரி

ரூ.50 கோடி மோசடி வழக்கில் புதுச்சேரி போலீஸ் சம்மன்- தமன்னா, காஜல் நேரில் ஆஜர் ஆவார்களா?

- பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
- 2 பெண்கள் உள்பட 10 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன் (வயது 70). இவர் கிரிப்டோ கரன்சியில் ஆன்லைன் ஆப் மூலம் ரூ.98 லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலில் கோவையை சேர்ந்த நித்தீஷ்குமார் ஜெயின் (வயது36) அரவிந்த்குமார், (40) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுபோன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோரிடம் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த மோசடியில் தொடர்புடைய 2 பெண்கள் உள்பட 10 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோவை, மாமல்லபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் மோசடி செய்த பணத்தை கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து, மிக பெரிய அளவில் விழாக்களை நடத்தியுள்ளனர்.
இதில் சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்களை அழைத்து வந்துள்ளது தெரியவந்தது.

இதற்காக நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பணம் எந்த வங்கிக்கணக்கில் இருந்து அனுப்பப்பட்டது. அவர்களுக்கும் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி வக்கீல்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல், வக்கீல்களை அனுப்பலாம், ஒருவேளை சம்மன் பெற மறுத்தால் வீட்டில் சம்மன் ஒட்டுவார்கள். அதன்பிறகும் சம்மனுக்கு மதிப்பளிக்கா விட்டால் கோர்ட்டு மூலமாக நடவடிக்கை எடுத்து வரவழைக்கலாம்.
அப்போதும் வக்கீல் அனுப்பி விளக்கம் தெரிவிக்கலாம். நேரில் அவர்களிடமே விளக்கம் பெற விரும்பினால் வக்கீல் முன்னிலையில் அவர்கள் விளக்கம் தரலாம்.
நல்லெண்ண அடிப்படையில் அந்த விளம்பரத்தில் நடித்தோம். எங்களுக்கு வேறு எந்த தொடர்பும் கிடையாது என அவர்கள் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.
மோசடியில் அவர்களுக்கு தொடர்பு இல்லாத நிலையில் அவர்களை அதிகப்பட்சமாக சாட்சியாக சேர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.