search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விஜய்யுடன் கை கோர்க்கிறார் ரங்கசாமி?
    X

    விஜய்யுடன் கை கோர்க்கிறார் ரங்கசாமி?

    • ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.
    • இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆண்டு விழா கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி பேசினார். அப்போது வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல்வேறு கேள்விகளை அரசியல் ரீதியாக உருவாக்கியுள்ளது.

    தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்து வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் பா.ஜ.க. விரும்புகிறது.

    அதே நேரத்தில் தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்ற அறிவிப்பு இந்த கூட்டணியை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

    புதுவையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்காலை ஒட்டியுள்ள நாகை, மயிலாடுதுறை ஆகிய தமிழக பகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனரும், முதல்-அமைச்சருமான ரங்கசாமிக்கு செல்வாக்கு உள்ளது. இந்த மாவட்டங்களில் அவர் சார்ந்த சமூகத்தினரும் அதிகளவில் உள்ளனர்.

    தமிழகத்தில் தற்போது த.வெ.க.வைத் தொடங்கி ஓராண்டு நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கமானவர்.

    கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு சென்னையில் நடிகர் விஜயை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து பேசினார். முதல்-அமைச்சர் என்ற புரோட்டா காலை காட்டிக்கொள்ளாமல் தனக்கு நெருக்கமானவர் என்ற அடிப்படையில் ரங்கசாமி நேரில் சென்று விஜயை சந்தித்தார்.

    அதன் பிறகு நடிகர் விஜய், முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொடர்ந்து சந்தித்து பேசி வருகிறார்.

    இவர்களுக்கு இணைப்பாக த.வெ.க. பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் செயல்பட்டு வருகிறார். நடிகர் விஜய் கட்சி தொடங்கும்போது அதற்கு பல்வேறு ஆலோசனைகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். தொடர்ந்து கட்சி முதல் மாநாட்டின் போதும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை விஜய் அழைப்பார் என்ற பேச்சு எழுந்தது. இதனால் ரங்கசாமி-விஜய் இடையே சுமூக உறவு உள்ளது.

    இந்த எண்ணத்தில்தான் தமிழகத்திலும் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார் என என்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் கருதுகின்றனர்.

    இந்த நிலையில் தனது கொள்கை விரோதியாக தி.மு.க., பா.ஜ.க.வை த.வெ.க. மாநாட்டில் நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

    இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க. கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதனிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் 2026 தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடருமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என பதிலளித்தார்.

    Next Story
    ×