என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சர்ப்ப தோஷமும் குழந்தை பாக்கியமும்
    X

    சர்ப்ப தோஷமும் குழந்தை பாக்கியமும்

    • நவகிரகங்களின் இயக்கமே மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கையும் தீர்மானிக்கிறது.
    • ராகு சூரியனை பாதிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம்.

    நவகிரகங்களின் இயக்கமே மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கையும் தீர்மானிக்கிறது. இதில் உருவம் உள்ள ஏழு கிரகங்களைக் காட்டிலும் உருவமற்ற இரண்டு நிழல் கிரகங்களாகிய ராகுவும், கேதுவுமே மனித வாழ்வை தீர்மானிக்கின்றன. ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும், அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு. ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலை பிரமாண்டப்படுத்தும். கேது சுருக்கும். ராகு, கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகம் அல்லது அவயோகத்தை சந்திக்கின்றார்கள்.

    ஜாதகத்தில் ராகு கேது செயல்படும் விதம் மனிதர்களுடைய வாழ்வில் மாற்றங்களை வழி நடத்தக் கூடிய கர்ம வினை அதிகாரிகளாக ராகு,கேதுக்களை கூறலாம். ஏற்கனவே கடந்து வந்த ஜென்மத்தில் நடந்த நல்ல /கெட்ட சம்பவங்களையும் தற்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கிற ஜென்மத்தில் நடக்கும் அனைத்து நல்ல/கெட்ட செயல்களுடன் இணைத்து புதிய பதிவுகளை பதிவு செய்யும் வினைப் பதிவாளராகவும், அதற்கேற்றபடி வினைகளைத் தூண்டும் வினை ஊக்கியாகவும் செயல்படுகின்றனர். மனிதர்களின் மரபியல் தன்மையான பாவ புண்ணியங்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் இவர்கள் ஒவ்வொரு பிறப்பிலும் வேறு வேறு உடலில் இருக்கும் ஆன்மாவிற்கு அதன் அலைவரிசைக் கேற்ப வினைகளின் நன்மை தீமைகளை அனுப்பி அவ்வுடலை அனுபவிக்க செய்பவர்கள்.

    பூமிக்கு வரும் மற்ற கிரகங்களின் கதிர் வீச்சுகளையும் தடுக்கும் ஆற்றலை பெற்ற இவர்கள் ஒரு ஜாதகரின் மரபு வழி செய்திகளை செல்களின் மூலம் கொண்டுவருவதும் செயலாக்கம் செய்யும் வலிமை படைத்தவர்கள். அதனால் தான் ஜோதிடத்தில் தந்தை வழி பாட்டன் பாட்டிக்கு ராகுவையும் தாய்வழிப் பாட்டன் பாட்டிக்கு கேதுவையும் காரகமாக கூறப்படுகிறது. ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.

    அதாவது கேது சந்திரனின் பிம்பம் என்பதால், தாய் வழி பாவத்தை குறிக்கிறார். ராகு சூரியனை பாதிப்பதால், தந்தை வழி முன்னோர்களின் பாவங்கள் என்பதை அறியலாம்.

    ஒரு ஜாதகர் பெரும் மரபுவழி செய்திகளான முன்னோர்களின் உடலமைப்பு, குணாதிசயங்கள், நோய், பாவம், புண்ணியம் போன்றவற்றை செல்களின் மூலம் கொண்டு செல்கிறார்கள். இதை அறிவியல் ரீதியாக கூறினால் மனிதர்களின் மரபணுவில் இருக்கும் 46 குரோமோசோம்கள் ராகு-கேது கலவைகளாகும். குரோமோசோம்களில் ஒருவரின் உயரம், தோல், முடி, கண்விழி ஆகியவற்றின் நிறம், அறிவுத்திறன், பேசும் விதம், முகத்தோற்றம், உடல்பருமன், பரம்பரைவியாதி, பாவம், புண்ணியம் போன்ற அனைத்து குணங்களும் பதிவாகி இருக்கும். 23 குரோமோசோம்கள் தந்தை வழியை குறிப்பவை (ராகு) மற்றும் 23 குரோமோசோம்கள் தாய் வழியை குறிப்பவை (கேது). மரபுவழி பாவ, புண்ணியங்களை குறிப்பிடும் கிரகங்கள் ராகு கேதுக்கள் என்பதால் ஒருவரின் பூர்வ புண்ணியம் (5-ம்மிடம்) மற்றும் பாக்கிய ஸ்தானமான (5-க்கு 5) ஏற்பவே புத்திர பிராப்தம் அமைகிறது. ஒரு தலைமுறைக்கு உருவாகும் வாரிசுகளையும் அந்த வாரிசுகளால் அடையும் யோகம் மற்றும் அவயோகத்தையும் நிர்ணயிப்பதில் சர்ப்ப கிரகங்களின் பங்கு அளப்பரியது.

    சுருக்கமாக ஒருவரின் தந்தை மற்றும் தாய்வழி முன்னோர்களின் பாவம் மற்றும் புண்ணியத்தின் அடிப்படையிலேயே ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் நிலைப்பாடு இருக்கும். ஜோதிட ரீதியாக ஒருவரின் புத்திர பாக்கியத்தை புத்திரக்காரகரான குருவும் ஐந்தாமிடமெனும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒன்பதாமிடமெனும் பாக்கிய ஸ்தானமுமே தீர்வு செய்கிறது. குழந்தை பாக்கியத்தை தடை செய்வதற்கான சில முக்கிய கிரக அமைப்புகளை காணலாம்.

    1. ஜென்ம லக்னம், ராசி மற்றும் 5-ம் இடத்தை சனி பார்ப்பது.

    2. ஐந்தாம் அதிபதி அல்லது 5-ல் நின்ற கிரகம் தனித்து புதன் வீட்டில் நின்று பாவகிரகங்களின் சம்பந்தம் பெறுவது.

    3. 7-ல் சனி, 8-ல் செவ்வாய், 5-ல் கேது நிற்பது.

    4. 9-ல் சூரியன் செவ்வாய் இணைந்து சனி 11-ல் அமர புத்திர தோஷம் ஏற்படும்.

    5. 1,5,8,12-ல் சனி, செவ்வாய் இணைவு பெறுவது புத்திர தோஷம்.

    6. ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு உண்டாகும்.

    7. ஐந்து, ஒன்பதாம் அதிபதிகள் கேதுவுடன் சம்பந்தம் பெறுவது.

    8. ஆண், பெண்ணின் 5, 9-ம் அதிபதிகளுக்கு தொடர்பின்மை.

    9. குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம்

    10. 5,8-ம் அதிபதிகள் அல்லது 5,12-ம் அதிபதிகள் பரிவர்தனை பெற்று குரு பலமில்லாமல் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும்.

    11. 9-ம் அதிபதி 12-ல், 5-ம் அதிபதி 6-ல் நின்று புத்திர தோஷம் ஏற்படும். 12. 5-ம் அதிபதி 6,8,12-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவது கருச்சிதைவை ஏற்படுத்தும்.

    13. 5-ம் இடத்தில் நீச்சம் பெற்ற கிரகம் இருக்க கூடாது.

    14. குரு மற்றும் ஐந்தாம் அதிபதிக்கு திதி சூன்ய பாதிப்பு பெறுதல்

    15. 5-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறும் செவ்வாய் , ராகு கருக்கலைப்பை ஏற்படுத்தும்.

    16.ஐந்தாம் அதிபதியும் குருவும் பலவீனமடைந்தால் புத்திர தடை; ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும்.

    17. குரு லக்ன பாதகாதிபதி சம்பந்தம் பெறுவது.

    18. குரு வக்ரம்,அஸ்தங்கம் அடைதல்.

    19. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது.

    20. ராகு/கேது தோஷம் உள்ள ஜாதகத்தை ராகு/கேது தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது.

    21. ஆண், பெண் ராசி சஷ்டாஷ்டகமாக அமைவது.

    22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பாதிப்பது.

    23. மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் 5-ல் ராகு, கேது இருப்பதும், கிரகச் சேர்க்கையில் சூரியன்+ ராகு, சூரியன்+ சனி, சந்திரன் + ராகு, சனி + ராகு, செவ்வாய் + ராகு, செவ்வாய் + கேது இருந்தாலும், அந்த ஜாதகருக்கு சர்ப்பதோஷம் ஏற்பட்டு, அதனால் குழந்தை பாக்கியம் உரிய காலத்தில் கிடைக்காமல் தடை ஏற்படும். குழந்தை பாக்கியம் தாமதமாக கிடைத்தாலும் குழந்தையால் பிரச்சினை, பாதிப்பு, பயன்இல்லாத நிலை ஏற்படும். குழந்தை குறித்த கவலையும் இருக்கும்.

    குல தெய்வத்தை குழி தோண்டி புதைத்தவர்கள், கோவில் சொத்தை கொள்ளையடித்தவர்கள், குரு காணிக்கை கொடுக்க மறுத்தவர்கள், குரு துரோகம் செய்தவர்கள், ஒருவரின் பூர்வீக சொத்தை அபகரித்தல், ஒருவருக்கு தொழில் லாபத்தை இழக்க செய்தல், காதலித்து ஏமாற்றிய குற்றம், ஒருவருக்கு வாரிசு உருவாக முடியாமல் செய்தல் போன்றவற்றின் கர்ம வினைப் பதிவாகும். இதன் பலனாக குழந்தை பிறப்பில் தடை, உடல் நலக் குறைவுடன் கூடிய குழந்தை பிறப்பது, குல தெய்வம் தெரியாமல் போவது, குல தெய்வ அனுகிரகமின்மை, பூர்வீக சொத்தை பயன்படுத்த முடியாமை,

    குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு, குழந்தைகளுக்கு முன்னேற்றமின்மை, மூத்த சகோதரர்களுக்காக பொருள் இழக்க நேருதல் அல்லது மூத்த சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு, தொழிலில் பெரும் பொருள் இழப்பு ஏற்படும்.

    இவர்கள் குல தெய்வ வழிபாட்டை வலி மைப்படுத்துவதுடன், சர்ப்பம் உள்ள புற்றை வழிபாடு செய்து வர வேண்டும்.

    கருச்சிதைவு செய்தவர்கள் , அதற்கு காரணமாக இருந்தவர்கள், கோவில் சிலையை திருடியவர்கள், புற்றை இடித்தவர், ஒருவரை மனநோயாளியாகச் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டியவர்களுக்கு, நல்ல காதலை பிரித்தவர்களுக்கு இந்த அமைப்பு ஏற்படும். இதன் பலனாக இந்த பிறவியில் ஆசைப்பட்டதை அடைய முடியாமை, குழந்தையின்மை, குழந்தைகளை பிரியும் நிலை, குழந்தைகளால் அவமானம், பூர்வீகத்தை விட்டு வெளியேறுதல், உழைப்பிற்குரிய ஊதியமின்மை ஏற்படும்.

    இவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு, உடை தானம் வழங்க வேண்டும். வயதில் மூத்தவர்களின் நல்லாசி பெறுவதுடன் தொழிலில் வரும் லாபத்தில் சிறு பகுதியை வயதான முதியோர் இல்லங்களுக்கு தர வேண்டும். பராமரிப்பு இல்லாத கோவில்களை பராமரிக்க நிதி உதவி செய்ய வேண்டும்.

    5-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் ராகு/கேதுக்களுக்கு மேலே கூறிய பரிகாரங்கள் நல்ல பலன் தரும். காரணம் தெரியாமல் குழந்தை பிறப்பில் தடை இருப்பவர்களுக்கான பரிகாரங்கள் வியாழக்கிழமை நவகிரகத்தில் உள்ள குருவை வழிபாடு செய்ய வேண்டும்.

    ஆதரவற்ற குழந்தைகளுக்கு மஞ்சள் ஆடைகள், அன்னதானம் தண்ணீருடன் கொடுக்க வேண்டும்.

    குல தெய்வத்திற்கு தங்கம் தானம் தர வேண்டும். முன்னோர்களுக்கு முறையாக திதி கொடுத்து பித்ரு தோஷம் நிவர்த்தி செய்தால் புத்திர பாக்கியம் உடனே கிடைக்கும். ராகுவிற்கு செய்யும் பரிகாரத்தை செவ்வாய் கிழமையும் , கேதுவிற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை சனிக்கிழமையும் சார்ந்து இருந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    கர்நாடகாவின் குகே சுப்ரமண்யா, ஆந்திராவின் ஸ்ரீ காளகஸ்தி , தமிழ் நாட்டில் சங்கரன்கோவில் , திருநாகேஸ்வரம் , நாகர்கோவில் , சிதம்பரம்தில்லை காளி போன்ற புனித தலங்களுக்கு சென்று குறைந்தது 2 மணி நேரம் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து சரணாகதி அடைந்து வழிபட வேண்டும்.

    9-ம் அதிபதி வலுவாக இருந்தால் சர்ப்ப தோஷ சாந்தி பரிகாரம் நல்ல பலன் தரும். இறை ஆற்றலை இயற்கையை நம்பினால் வினைப் பயன் நீங்கும்.வாழ வழி பிறக்கும். வாழ்க்கை இன்பமாகும். இன்பத்தை தேடிச் செல்ல வேண்டியதில்லை. இன்பம் தேடி வரும்.

    Next Story
    ×