search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா-பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை
    X

    சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா-பாகிஸ்தான் நாளை பலப்பரீட்சை

    • பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
    • முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து , ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரின் 5-வது லீக் ஆட்டம் துபாயில் நாளை நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான்- அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் கடைசியாக 2023-ம் ஆண்டு அக்டோபரில் மோதின. அகமதாபாத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதில் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

    வங்காளதேசத்துக்கு எதிராக சுப்மன் கில் சதம் அடித்து முத்திரை பதித்தார். இதேபோல முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தினார். கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஹர்ஷித் ராணா, அக்ஷர் படேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். விராட் கோலி திறமை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. ராகுல் வங்காளதேசத்துக்கு எதிராக சிறப்பாக ஆடினார். இதனால் ரிஷப் பண்ட் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றால் குல்தீப் யாதவ் கழற்றி விடப்படுவார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

    முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. தோற்றால் அந்த அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். ஏனென்றால் பாகிஸ்தான் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது.

    அந்த அணியில் கேப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், சல்மான் அகா, குஷ்தில் ஷா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர். பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்க கடுமையாக போராடும்.

    இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே அதிக எதிர்பார்ப்பு இருக்கும். அது மாதிரியே சாம்பியன்ஸ் டிராபி போட்டியையும் ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் படேல், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல் தீப் யாதவ், ஹர்சித் ராணா, முகமது ஷமி, ரிஷப்பண்ட், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ் தீப் சிங், வருண் சக்கர வர்த்தி

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), பாபர் ஆசம், சவுத் ஷகீல், பகர் ஜாமன், சல்மான் அகா, தையூப் தாகீர், குஷ்தில் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது, இமாம், உல்-ஹக், உஸ்மான் கான், பஹீம் அஸ்ரப் முகமது ஹஸ்னைன்.

    Next Story
    ×