search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஒலிம்பிக் திருவிழா நாளை கோலாகலமாக தொடக்கம்: 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
    X

    ஒலிம்பிக் திருவிழா நாளை கோலாகலமாக தொடக்கம்: 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

    • ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
    • 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது.

    பாரீஸ்:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கி.மு.776-ம் ஆண்டு முதலாவது ஒலிம்பிக் போட்டி கிரேக்க நாட்டில் உள்ள ஒலிம்பியா நகரில் நடந்தது. பின்னர் கிரேக்க மன்னர் தியோடோசியஸ் இநத ஒலிம்பிக் போட்டிக்கு தடை விதித்தார்.

    நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. கிரீஸ் தலைநகர் ஏதென்சில் முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி நடந்தது. அதில் இருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடை கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

    முதல் உலகப்போர் காரணமாக 1916-ம் ஆண்டும், 2-வது உலகப் போர் காரணமாக 1940 மற்றும் 1944-ம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.

    கடைசியாக 2021-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடந்தது. 2020-ம் ஆண்டு நடைபெற இருந்த போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப் பட்டது. கொரோனா பாதிப்பால் ரசிகர்கள் யாருமே அனுமதிக்கப்படாமல் இந்த போட்டி நடத்தப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்படுகிறது. இந்த ஒலிம்பிக் திருவிழா நாளை (26-ந் தேதி) கோலாகலமாக தொடங்கு கிறது. ஆகஸ்ட் 11-ந் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது. 3-வது முறை யாக பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதற்கு முன்பு 1900, 1924 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். முதல் முறையில் வீரர்கள், வீராங் கனைகள் சம அளவில் கலந்து கொள்கிறார்கள். 32 விளையாட்டில் 46 பந்தயத்தில் 324 வகை பிரிவில் போட்டி நடைபெறுகிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்கா சீனா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா 592 பேரையும், சீனா 388 பேரையும் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜப்பான், இங்கிலாந்து, தென் கொரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள். பதக்கங்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    100 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதால் பிரான்ஸ் இந்த முறை அதிகமான பதக்கங்களை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் ஆக மொத்தம் 113 பதக்கத்தை குவித்து முதல் இடத்தை பிடித்தது. சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 89 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் மொத்தம் 58 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 117 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஆக்கி, கோல்ப், ஜூடோ, துடுப்பு படகு, பாய்மர படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய 16 விளையாட்டுகளில் 70 வீரர்களும், 47 வீராங்கனைகளும் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் தடகளம் (நீரஜ் சோப்ரா) , பேட்மின்டன் (பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி) , பளு தூக்குதல் (மீராபாய், சானு), குத்துச்சண்டை (லவ்லினா), ஆக்கி, துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுக்களில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்க மும், மீரா பாய் சானு (பளு தூக்குதல்) ரவி குமார் தகியா (மல்யுத்தம்), பி.வி.சிந்து, லவ்லினா, பஜ்ரங் புனியா மற்றும் இந்திய ஆக்கி அணியினர் வெண்கல பதக்கம் வென்றனர். இந்தப் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆக மொத்தம் 7 பதக்கம் பெற்றது. பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இரட்டை இலக்க பதக்க ஆர்வத்துடன் இருக்கிறது.

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் "எல்லோருக்கும் வாய்ப்பு" என்பதாகும்.

    Next Story
    ×