search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் புதுப்பொலிவு பெறும் 388 அம்மா உணவகங்கள்
    X

    சென்னையில் புதுப்பொலிவு பெறும் 388 அம்மா உணவகங்கள்

    • தொடக்க காலத்தில் 3 லட்சம் பேர் வரை அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வந்தனர்.
    • பெரும்பாலான உணவகங்களில் மாவு அரைக்கும் எந்திரம் பழுதாகி வெளியில் பணம் கொடுத்து அரைக்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் வேலைக்காக தங்கும் இளைஞர்கள் கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் குறைந்த செலவில் வயிறாற சாப்பிட வேண்டும் என்பதற்காக அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் 2013-ம் ஆண்டு சென்னையில் 200 வார்டுகளில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 400 ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகளிலும் தொடங்கியதால் வெளியூர்களில் இருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் பயன் அடைந்தனர். 3 வேளையும் மலிவு விலையில் உணவு கிடைத்ததால் இத்திட்டம் பிற மாநகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    மழை வெள்ளப் பாதிப்பு, கொரோனா பேரிடர் காலத்தில் அம்மா உணவகம் சென்னைவாசிகளுக்கு பெரிதும் கை கொடுத்தது.

    தொடக்க காலத்தில் 3 லட்சம் பேர் வரை அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வந்தனர். ஆனால் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

    சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த உணவகங்கள் தொடர் வருவாய் இழப்பால் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது.

    இதனால் அம்மா உணவகங்களை பராமரிக்க ஆர்வம் காட்டவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட பாத்திரங்கள், எந்திரங்கள் பழுதானதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கஷ்டப்பட்டனர்.

    பெரும்பாலான உணவகங்களில் மாவு அரைக்கும் எந்திரம் பழுதாகி வெளியில் பணம் கொடுத்து அரைக்கும் நிலை ஏற்பட்டது. சமையல் பாத்திரங்கள் ஓட்டை உடைசலாக மாறியது. அம்மா உணவகங்களை பராமரித்து சீரமைக்க முடியாத நிலையில் சாப்பிடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு 75 ஆயிரம் பேர் மட்டுமே சாப்பிட்டனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். உணவின் தரத்தை ஆய்வு செய்தபோது அவற்றின் நிலையை அறிந்து அம்மா உணவகங்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.7 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சேதம் அடைந்த பாத்திரங்கள், எந்திரங்களை மாற்றி புதிதாக வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் 388 அம்மா உணவகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உத்வேகத்தில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

    அம்மா உணவகங்களில் சேதம் அடைந்த பாத்திரங்கள் கணக்கெடுக்கும் பணி முடிந்து விட்டது. எந்தெந்த பொருள் வாங்க வேண்டும் என்ற விவரங்களை மண்டல அலுவலர்களிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அம்மா உணவகத்துக்கும் ரூ.2 லட்சம் வீதம் செலவிட தீர்மானிக்கப்பட்டு புதிய பாத்திரங்கள், மாவு அரைக்கும் எந்திரம், சப்பாத்தி எந்திரம், மிக்சி உள்ளிட்டவை வாங்க பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர பில்லிங் மெஷின் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டோக்கன் கொடுப்பதற்கு பதிலாக பில்லிங் எந்திரம் புதிதாக வாங்கி பயன்படுத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முதலமைச்சரின் உத்தரவுப்படி அம்மா உணவகங்களை சீரமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 388 உணவகங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட உள்ளது. 10 வருடத்திற்கு முன்பு வாங்கப்பட்ட பொருட்கள் எல்லாம் பழுந்தடைந்து விட்டன. அவற்றிற்கு பதிலாக புதிய பாத்திரங்கள் விரைவில் வாங்கப்படுகிறது. தற்போது அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் 75 ஆயிரம் பேர் உணவு சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×