search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விபத்தில் சிக்கி 50 வயது நபர் படுகாயம்: ரூ.1½ கோடி நகைகளை பத்திரமாக மீட்ட இன்ஸ்பெக்டர்

    • காயம் அடைந்த நபரை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
    • உரிய நேரத்தில் உதவி செய்த இன்ஸ்பெக்டர் சிவஆனந்தை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

    சென்னை:

    சென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே கோயம்பேடு நோக்கி செல்லும் சாலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்ட நிலையில் குப்புற படுத்தபடி அவர் மயங்கினார்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். யாரும் அருகில் கூட செல்லவில்லை. ஆனால் மயங்கி கிடந்தவரை சுற்றி கூட்டம் கூடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த நேரத்தில் அந்த வழியாக சென்னை மதுரவாயல் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் தனது வாகனத்தில் வந்தார்.

    சாலையில் ஒருவர் மயங்கி கிடப்பதையும் சுற்றி நின்று ஆட்கள் வேடிக்கை பார்ப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கீழே இறங்கி சென்று பார்த்தார். கூட்டத்தை கலைய செய்துவிட்டு தலை குப்புற மயங்கி கிடந்த நபரை நேராக புரட்டினார்.

    அப்போது அவருக்கு மூச்சு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் சிவஆனந்த், காயத்துடன் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றும் முயற்சியில் வேகமாக இறங்கினார்.

    அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி தனது வாகனத்தில் இருந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து விரித்தார்.

    இதையடுத்து அங்கிருந்த சிலரது உதவியுடன் காயம் அடைந்த நபரை சரக்கு ஆட்டோவில் தூக்கிபடுக்க வைத்து தனது போலீஸ் வாகனத்தை சைரன் ஒலி எழுப்பியவாரே முன்னால் போகச் சொன்னார். டிரைவர் தீபன் சக்கரவர்த்தி போலீஸ் வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றார்.

    இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த், சரக்கு வாகனத்தில் உயிருக்கு போராடிய நபருடன் அமர்ந்து பயணித்தார்.

    பின்னர் அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காயம் அடைந்த நபரை சேர்த்து சிகிச்சை அளித்தனர். இவர் வந்த மோட்டார் சைக்கிளில் பை ஒன்று இருந்தது. அதனையும் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் பத்திரமாக எடுத்துச் சென்றார்.

    காயம் அடைந்த நபர் மயக்க நிலையிலேயே இருந்ததால் அவரை பற்றிய தகவல்கள் ஏதும் உள்ளதா? என்று பையை எடுத்து பார்த்தார்.

    அப்போது அவர் கண்ட காட்சி தூக்கிவாரிப் போட்டது. பையில் ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பில்லுடன் இருந்தன. செல்போன் ஒன்றும் இருந்தது.

    காயம் அடைந்த நபர் அப்போதும் மயக்கம் தெளியாமலேயே இருந்தார். இதனால் அவர் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கடைசியாக யாரிடம் பேசியுள்ளார் என்று பார்த்து போன் செய்து விசாரித்தார். அப்போதுதான் 1½ கோடி மதிப்புள்ள 340 பவுன் நகையுடன் மயங்கி கிடந்தவரின் பெயர் அரிகரன் என்பது தெரியவந்தது. 54 வயதாகும் இவர் மேற்கு மாம்பலத்தில் வசித்து வருகிறார். தங்க நகைகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் 6 ஆண்டுகளாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

    அங்கிருந்து பிரபல நகை கடை ஒன்றிற்கு நகைகளை கொண்டு சென்றதும், அப்போதுதான் விபத்தில் சிக்கி மயங்கி கிடந்ததும் தெரியவந்தது. சரியான நேரத்தில் இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் சம்பவ இடத்துக்கு சென்று அரிகரனின் உயிரை காப்பாற்றியதுடன் ரூ.1½ கோடி நகையையும் மீட்டுள்ளார்.

    இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் நகை குறித்து விசாரணை நடத்தி உரியவர்களிடம் நகையை ஒப்படைத்தார்.

    இதன்படி நகை கடையில் இருந்து கதிரவன் என்பவர் வந்து நகையை பெற்றுக் கொண்டார்.

    உரிய நேரத்தில் உதவி செய்து நகைகளையும் பத்திரமாக ஒப்படைத்த இன்ஸ்பெக்டர் சிவஆனந்த் மற்றும் டிரைவர் தீபன் சக்கரவர்த்தியை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார். இருவருக்கும் வெகுமதி வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×