என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிராட்வேயில் வாடகை செலுத்தாத 70 கடைகள் பூட்டி 'சீல்' வைப்பு- மாநகராட்சி நடவடிக்கை
- மாநகராட்சி மண்டலம் 5-க்குட்பட்ட பிராட்வேயில் இன்று காலையில் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர்.
- பிராட்வேயில் வரிசையாக உள்ள கடைகளுக்கு பூட்டி சீல் வைத்ததோடு நோட்டீசும் ஒட்டினார்கள்.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒரு சிலர் நீண்ட காலமாக வாடகை கொடுக்காமல் இருந்து வருகிறார்கள். பல கோடிக்கு மேல் வாடகை பாக்கி நிலுவையாக இருந்து வருகிறது. இதனை அதிரடியாக வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் முக்கிய இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருபவர்கள் முறையாக தொழில்வரி, தொழில் உரிமம் மற்றும் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர். தொடர்ந்து வாடகை, வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வரும் கடைகள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் மாநகராட்சி மண்டலம் 5-க்குட்பட்ட பிராட்வேயில் இன்று காலையில் மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினர். கடை உரிமையாளர் கள் இன்று காலையில் கடைகளை திறப்பதற்கு முன்பே ஊழியர்கள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
பிராட்வேயில் வரிசையாக உள்ள கடைகளுக்கு பூட்டி சீல் வைத்ததோடு நோட்டீசும் ஒட்டினார்கள். மாநகராட்சியின் நடவடிக்கையை மீறி யாரும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட 70 கடைகள், ரூ.30 லட்சம் பாக்கி வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சியின் இந்த நடவடிக்கை அந்த பகுதியில் உள்ள வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலையில் வழக்கம்போல் கடைகளை திறக்க வந்த உரிமையாளர்கள், ஊழியர்கள் சீல் வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.






