search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடுமலை-மூணாறு சாலையில் அரசு பஸ்சை வழிமறித்து தாக்கிய ஒற்றை யானை அச்சத்தில் தவித்த பயணிகள்
    X

    யானையால் தாக்கப்பட்ட அரசு பஸ்சையும், கண்ணாடி சேதம் அடைந்துள்ளதையும் படத்தில் காணலாம்.

    உடுமலை-மூணாறு சாலையில் அரசு பஸ்சை வழிமறித்து தாக்கிய ஒற்றை யானை அச்சத்தில் தவித்த பயணிகள்

    • பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
    • சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் வாகன மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் இருந்து உடுமலை வழியாக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாருக்கு சென்றது.

    பின்னர் அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு இரவு மூணாறில் இருந்து அந்த பஸ் புறப்பட்டு உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. தலையார் அருகே வந்த போது உடுமலை-மூணார் சாலையில் ஆக்ரோசத்துடன் சுற்றித்திரிந்த ஒற்றை யானை அந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதில் பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இதை சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் அலறினர். காட்டு யானையின் அடாவடி செயலால் உடுமலை- மூணார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை பஸ்சை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக உடுமலை- மூணார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மேலும் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.யானைகளை துன்புறுத்தும் வகையில் ஒலி எழுப்புவதோ, கற்களை வீசுவதோ கூடாது. யானைகள் சாலையை கடக்கும் நிகழ்வு நேர்ந்தால் தூரத்தில் வாகனங்களை நிறுத்தி அவை சாலையை கடந்த பின்பு இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

    Next Story
    ×