search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்திய இளம் பெண்களின் உடல்நிலை பாதிப்பு: மருந்து கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
    X

    திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள மருந்துக்கடையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய காட்சி.

    கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்திய இளம் பெண்களின் உடல்நிலை பாதிப்பு: மருந்து கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை

    • டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.
    • கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    பெரும்பாலான தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களிலும் மற்ற தொழிலாளர்கள் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், அவிநாசி உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தங்கியிருந்து பணிக்கு சென்று வரும் தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

    தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவே அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தது தெரியவந்தது. தவறான உறவால் கர்ப்பமான இளம்பெண்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் இருக்க மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி திருப்பூர் மாநகரில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.1000, ரூ.1500 என கூடுதல் விலைக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் திருப்பூர் வீரபாண்டி, பல்லடம் சாலை உள்பட மாநகர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சில மருந்துக்கடைகளில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. மேலும் பெண்களும் அதனை பயன்படுத்தக்கூடாது. அதனை பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படும். எனவே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைபட்டால் காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    Next Story
    ×