search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடிகை விஜயலட்சுமி புகார்: சீமான் போலீஸ் நிலையத்தில் ஆஜர்
    X

    நடிகை விஜயலட்சுமி புகார்: சீமான் போலீஸ் நிலையத்தில் ஆஜர்

    • நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையம் அருகே திரண்டு இருந்தனர்.
    • ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    போரூர்:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2012-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி ஒரு புகார் அளித்தார்.

    அதில், சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று கூறியிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட வளசரவாக்கம் போலீசார் கற்பழிப்பு உள்பட 5 பிரிவின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் விஜயலட்சுமி திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் சீமான் மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் சீமானை கைது செய்ய வேண்டும். அதுவரை தான் ஓயப் போவதில்லை என்று கூறினார்.

    இதையடுத்து போலீசார் மீண்டும் அந்த வழக்கை தூசு தட்டினார்கள். அந்த வழக்கு குறித்து விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது.

    முதல் தடவை சீமான் தரப்பில் வக்கீல் மட்டும் ஆஜர் ஆகியிருந்தார். 2-வது முறையாக விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் சேர்ந்து ஆஜர் ஆக வேண்டும் என்று சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதற்கிடையே ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி சீமான் தரப்பில் விஜயலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து நேற்று முன்தினம் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுத்தார்.

    மேலும் சீமான் சக்தி வாய்ந்த தலைவர் என்று குறிப்பிட்ட விஜயலட்சுமி தான் இனி சென்னைக்கு வரப் போவதில்லை என்றும் பெங்களூர் செல்வதாகவும் கூறி சென்றார்.

    ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு 18-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் சீமான் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார்.

    காலை 11.15 மணிக்கு சீமான் வந்தார். அவர் வருவதை அறிந்ததும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் நிலையம் அருகே திரண்டு இருந்தனர்.

    கோயம்பேடு துணை ஆணையாளர் உமையாள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    சீமான் வந்ததும் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அவரால் காரை விட்டு இறங்க முடியவில்லை.

    போலீஸ் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் அரண் போல் நின்றிருந்தார்கள். சீமானின் கார் செல்வதற்காக தடுப்பு வேலிகளை அகற்றுமாறு போலீசாரிடம் கூறினார்கள்.

    போலீசார் அகற்றாததால் தடுப்பு வேலிகளை தள்ளி விட்டு உள்ளே நுழைய முயன்றார்கள். இதனால் போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    சுமார் 15 நிமிடத்துக்கு பிறகு சீமான் காரில் இருந்து இறங்கி போலீஸ் நிலையத்துக்குள் சென்றார். விசாரணையின் போது அவருக்கு உதவுவதற்காக அவரது மனைவியும் வக்கீலுமான கயல்விழி மற்றும் வக்கீல் சங்கர் உள்பட 5 பேர் விசாரணையில் கலந்து கொண்டனர்.

    ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    Next Story
    ×