என் மலர்
தமிழ்நாடு
53-வது ஆண்டு தொடக்க விழா: அ.தி.மு.க. தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி இனிப்பு வழங்கினார்
- சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
- அ.தி.மு.க. தலைமை கழகம் இன்று கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வை தொடங்கினார். அ.தி.மு.க. தொடங்கப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்த பிரமாண்ட கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதையொட்டி அ.தி.மு.க. தலைமை கழகம் இன்று கொடி, தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்துக்கு வந்தபோது வருங்கால முதல்வரே, எங்கள் பொதுச் செயலாளரே வாழ்க என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆண்டு விழா நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.