search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின் கட்டண உயர்வை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்: அன்புமணி ராமதாஸ்
    X

    மின் கட்டண உயர்வை வாபஸ் பெறும் வரை போராட்டம் தொடரும்: அன்புமணி ராமதாஸ்

    • கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள்.
    • வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பா.ம.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. தோற்று இருந்தால் நிச்சயம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்க மாட்டார்கள். இது மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகம். உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    கடந்த 23 மாதங்களில் 33.7 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இதன் மூலம் மின்வாரியத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. மின்வாரியத்துக்கு கடன் வெறும் ரூ.10 ஆயிரம் கோடி தான். ஆனால் இன்னும் மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக பொய் கூறுகிறார்கள்.

    இதற்கு காரணம் நிர்வாக திறமை இல்லாத அரசு ஆட்சியில் உள்ளது. மக்கள் இனியும் வேடிக்கை பார்க்க கூடாது. வீதிக்கு வந்து போராடுங்கள். மின்துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. மாதம் தோறும் மின் கணக்கெடுக்கப்படும் என்றார்கள். அது என்னாச்சு? வெற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் பானு, சிவக்குமார் எம்.எல்.ஏ., ஈகை தயாளன், ரா.செ. வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×