என் மலர்
தமிழ்நாடு

வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்- அண்ணாமலை அறிவுரை

- ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம்.
- அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது.
வெள்ள நிவாரண பணிகள் ஒருபுறம் நடந்த நிலையில் அரசியலுக்கான வியூகத்தையும் பா.ஜனதா வகுத்தது. 39 பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து கமலாலயத்தில் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு அலுவலகம். அதேபோல் சட்டமன்ற தொகுதிகள் தோறும் ஒரு அலுவலகம்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் திறக்க வேண்டும். இந்த அலுவலகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். வருகிற 20-ந் தேதி முதல் அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் எவ்வளவு உறுப்பினர்கள் புதிதாக சேர்க்க முடியுமோ அவ்வளவு பேரையும் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் தொழில் அதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் என்று கட்சி சாராமல் இருக்கும் அனைத்து பிரபலங்களையும் சந்தித்து அவர்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசியல் களத்தில் வாய்ப்பு நன்றாக இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்வது களத்தில் பணியாற்றும் ஒவ்வொருவர் கையிலும் இருக்கிறது. தெலுங்கானாவில் பூத் கமிட்டிகள் சரியில்லாததால் பா.ஜனதாவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது அப்படிப்பட்ட சூழ்நிலை நமக்கும் வந்துவிடக்கூடாது. கூட்டணியைப் பற்றி யோசிக்க வேண்டாம். அதை கட்சி தலைமை முடிவு செய்யும்.
தனித்து நின்றும் சாதிக்கும் அளவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியை வலிமைப்படுத்துங்கள். குறிப்பாக மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வது மட்டுமல்லாமல் தகுதியானவர்களுக்கு திட்ட பலன்கள் கிடைப்பதற்கு உதவி செய்யுங்கள். இந்த அடிப்படை பணிகளே நமது வெற்றிக்கும் அடித்தளம் ஆகும் என்றார்.