என் மலர்
தமிழ்நாடு
போலி ஆபாச வீடியோக்கள் பரவுவதால், புகைப்படங்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும்- சைபர்கிரைம் பெண் அதிகாரி
- பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
- வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.
சென்னை:
சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-
இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.
ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.