என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கும்பக்கரையில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
- சுமார் 30க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாலம் வழியாக வனத்துறையினர் அழைத்து வந்து பாதுகாத்தனர்.
- நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப்பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேவதானப்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட இந்த அருவியில் கடந்த மாதத்தில் இருந்தே தண்ணீர் குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் முதல் விட்டு விட்டு பெய்த மழையினால் அருவிக்கு தண்ணீர் வந்தது. இதனால் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.
மதிய வேளையில் திடீரென அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கொடைக்கானல் அடுத்துள்ள வெள்ளகவி, வட்டக்கானல் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இருந்தபோதும் சுற்றுலா பயணிகள் தண்ணீர் வரத்து அதிகரித்ததை கவனிக்காமல் ஆனந்தமாக குளித்துக் கொண்டு இருந்தனர்.
ஒரு கட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படவே கரைக்கு அப்பால் 30 பேர் சென்றனர். அவர்கள் வெள்ளத்தை கடந்து வர முடியாமல் தவித்தனர். இதனைத் தொடர்ந்து ரேஞ்சர் டேவிட்ராஜா தலைமையில் வனவர் பூவேந்திரன், கண்காணிப்பாளர்கள் தமிழழகன், ஈஸ்வரன், காவலர்கள் விவேக், செந்தில் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு சுற்றுலா பயணிகளை மேலே ஏற அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து அருவியில் வழக்கமான வலது பாதையில் அவர்கள் கரையேறினர். சிலரை வனத்துறையினர் தண்ணீரில் இறங்கி தூக்கிவிட்டனர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாலம் வழியாக வனத்துறையினர் அழைத்து வந்து பாதுகாத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அருவியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
கும்பக்கரை அருவியில் இன்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தேனி மாவட்ட த்தில் கடும் கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






