search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவாரூருக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை செல்கிறார்- கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார்
    X

    திருவாரூருக்கு பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை செல்கிறார்- கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார்

    • தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
    • முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், 11 மணிக்கு சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடை பெறுகிறது.

    மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சே-எழுத்தே என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், எஸ்.ராஜா, எம்.ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகிறார்கள்.

    மதியம் 3.30 மணிக்கு பாட்டரங்கம் நடைபெறுகிறது. அதன் பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.

    கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திாி நிதிஷ் குமார் திறந்து வைத்து பேசுகிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவே திருவாரூர் சென்று தங்கியிருக்கிறார்.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை காலை ஐதராபாத் வழியாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து திருவாரூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மதியம் சுமார் 2.30 மணிக்கு சென்றடைந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன.

    நாளை மாலை 4.30 மணிக்குள் விழா முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி சென்று அதன் பிறகு விமானம் மூலம் பீகார் சென்றடைகிறார்.

    இதையொட்டி விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நகரமும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

    Next Story
    ×