search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது- அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
    X

    சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது- அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

    • ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
    • உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    யார் ஆட்சியில் இருந்தாலும் அங்கொன்றும், இங்கொன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வக்கிர புத்தி படைத்தவர்களாலும், ஒருசில கொலைகள் நடப்பது இயல்பு. குற்றவாளிகளை காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்வது நடைமுறை.

    ஆனால், தி.மு.க. ஆட்சியில் கொலைகள் செய்வதையே தொழிலாகக் கொண்டு பலர் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வெறியாட்டம் ஆடுவதும், பல கொலைகளில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறுவதும் கண்கூடாகும்.

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில்கூட 'நாங்கள்தான் செய்தோம்' என்று தானாகவே முன்வந்து சிலர் சரணடைந்துள்ளதும், அதில் ஒருவரை சென்னை மாநகர் காவல் துறையினர் என்கவுண்டர் செய்ததும் விந்தையான சம்பவமாகும்.


    காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் படுகொலை, சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிக் கழகச் செயலாளர் சண்முகம் படுகொலை, மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் படுகொலை என்று கட்சி பேதமின்றி பல படுகொலைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

    இவற்றில் ஒருசில கொலை நிகழ்வுகளைத் தவிர, ஏனைய குற்றங்களில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. உண்மைக் குற்றவாளிகள் இதுவரை பிடிபடாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகராம் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்ற நிலையில், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளது. மக்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் வாழ்வது அபாயகரமான ஒன்றாகும்.

    தி.மு.க. ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 80 கொலைகளும், பிப்ரவரி மாதம் 64 கொலைகளும், மார்ச் மாதம் 53 கொலைகளும்; ஏப்ரல் மாதம் 76 கொலைகளும், மே மாதம் 130 கொலைகளும், ஜூன் மாதம் 104 கொலைகளும், ஜூலை 17-ந் தேதி வரை 88 கொலைகளும் என, மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தமிழகத்தில் சென்னை மாநகரில் மட்டும் 86 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது, இரண்டாவது மதுரையில் 40 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 35-ம், விருதுநகரில் 31 கொலைகளும் நடைபெற்று முறையே மூன்றாவது, நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

    'அடுத்தவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்' என்ற இரு மாப்போடு இனியும் செயல்படாமல், சுய சிந்தனையோடு கொலை பாதகர்களிடமிருந்து மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று சிந்தித்து, போர்க்கால அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×