search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு 956 புதிய வகுப்பறை கட்டிடங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    தமிழகத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு 956 புதிய வகுப்பறை கட்டிடங்கள்- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, மடிக் கணினிகளை வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், 264 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 956 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள், 12 ஆய்வகக் கட்டிடங்கள், தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    அதில் பள்ளிக்கல்வித் துறையில் 114 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் 26 மாவட்டங்களில் உள்ள 106 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 515 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 12 ஆய்வகக் கட்டிடங்கள்;

    தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் குழந்தை நேய வகுப்பறை கட்டும் திட்டத்தின் கீழ், 68 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் 25 மாவட்டங்களில் உள்ள 176 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களில் கட்டப்பட்டுள்ள 441 வகுப்பறை கட்டிடங்கள்;


    தமிழ்நாட்டின் 28 மாவட்டங்களில் இயங்கி வரும் 28 தகைசால் பள்ளிகளில் 61 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் ஆகியவை அடங்கும்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, சென்னை, ஐ.ஐ.டியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஆதிதிராவிடர் நல மேல் நிலைப் பள்ளி மாணவர் சி. பார்த்தசாரதி, திருச்சி என்.ஐ.டியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள சேலம் மாவட்டம், கரியகோவில் வலவு, அரசு பள்ளி மாணவி சுகன்யா, திருச்சி சின்ன இலுப்பூர், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி ரோகிணி, சட்ட பல்கலைக் கழகத்தில் பயில தேர்ச்சி பெற்றுள்ள மாணவர் அஜய், தரமணி பேஷன் டெக்னாலஜியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள புளியம்பட்டி மாணவியர் மீனா மற்றும் எஸ். துர்கா, மணியார்பாளையம், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி பழனியம்மாள் மற்றும் மாணவர் கே. தவமணி, ஆகிய 8 மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவியர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, மடிக் கணினிகளை வழங்கினார்.


    சிறைகள் மற்றும் சீர் திருத்தப் பணிகள் துறையின் சார்பில் 9 கோடியே 45 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் திண்டிவனத்தில் கட்டப்பட்டுள்ள கிளைச் சிறைக் கட்டடம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சிறைச்சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    Next Story
    ×