search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இறையன்பு 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார்: புதிய தலைமை செயலாளரை தேர்ந்தெடுக்க முதலமைச்சர் ஆலோசனை
    X

    இறையன்பு 30-ந்தேதி ஓய்வு பெறுகிறார்: புதிய தலைமை செயலாளரை தேர்ந்தெடுக்க முதலமைச்சர் ஆலோசனை

    • தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    • ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு 1988-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவருக்கு வயது 60 ஆவதால் வரும் ஜூன் 30-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் மூன்று பேர் பெயர்கள் பட்டியலில் உள்ளது.

    அதாவது தற்போதைய தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள 1986-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மா. இவர் தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக தலைவராக உள்ளார்.

    அடுத்தது, 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ்.கே.பிரபாகர். இவர் தற்போது வருவாய்த் துறையின் கீழ் வரும் வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.

    மூன்றாவது, இதே 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலராக உள்ளார்.

    இதில், ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்தாண்டு மே மாதமும் சிவ்தாஸ் மீனா அடுத்தாண்டு அக்டோபரிலும் ஓய்வு பெறுகின்றனர். எஸ்.கே.பிரபாகர் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெறுகிறார்.

    இவர்களில் பெரும்பாலும் சிவ்தாஸ் மீனா தமிழக அரசின் அடுத்த தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

    தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெற்றவுடன் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷகில் அக்தர் மாநில தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதன் காரணமாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றவுடன், அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். விரைவில் புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்பதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

    Next Story
    ×