search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இளையபெருமாள் நூற்றாண்டு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    இளையபெருமாள் நூற்றாண்டு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    14CNI0260602024: தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளைய பெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது.

    இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடறிந்த தலைவராக உயர்ந்த பெரியவர் எல்.இளையபெருமாள் அரசியல் வாழ்க்கை என்பது, காலத்தாலும், களத்தாலும் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதாகும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1952 முதல் 1967 வரை 3 முறை தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நேரு பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் இளையபெருமாள் அரசியல் அடையாளங்கள்.


    அவர் தலைமையிலான அகில இந்தியத் தீண்டாமை ஆணையத்தின் பரிந்துரையின் பலனாகவே, தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்உருவானது என்பதே அவரது அரசியல் லட்சியத்தின் உன்னதத்திற்கும், விழுமியத்திற்கும் வெளிப்படையான வரலாற்றுச் சான்று.

    பெரியவர் இளையபெருமாள், 1980-ல் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமையும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். கலைஞருடன் மிகுந்த நெருக்கமும், நட்புறவும் கொண்டிருந்தவர். 1998-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முதலமைச்சர் தலைவர் கலைஞர் வழங்கினார்கள். "சலிப்பேறாத சமூகத் தொண்டர்" என்று கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்.

    இளையபெருமாள் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 18.4.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளேன்.

    பெரியவர் இளையபெருமாள் நூற்றாண்டைக் கொண்டாடுவதுடன், "இளையபெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்" என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலையும் வெளியிடுவது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நிகழ்வாகும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    Next Story
    ×