search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Thirumavalavan
    X

    2026 தேர்தலை முழு கட்டமைப்போடு சந்திக்க திருமாவளவன் திட்டம்

    • பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டு உள்ளார்.
    • ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 234 பேரை நியமித்து கட்சியை பலப்படுத்த வியூகம் அமைத்துள்ளார்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் காணொலி மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதியிலும் விடுதலை சிறுத்தை வெற்றி பெற்று அரசியல் அங்கீகாரம் பெற்றுள்ளது.

    25 ஆண்டுகளாக அரசியல் அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த விடுதலை சிறுத்தை கட்சி இதை ஒரு மாபெரும் திருப்புமுனையாக கருதுகிறது.

    அதனைத் தொடர்ந்து கட்சியை பலப்படுத்த மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திருமாவளவன் திட்டமிட்டு உள்ளார்.

    ஆகஸ்ட் 17-ந்தேதி திருமாவளவனின் 62-வது பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து இதன் மூலம் ஆலோசிக்கப்பட்டது. எப்போதும் போல் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி எழுச்சியுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

    செப்டம்பர் 17-ந்தேதி மது போதை ஒழிப்பு மாநாடு ஒன்றை கள்ளக்குறிச்சியில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து கூலி தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இனி இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என்பதற்காக இந்த மாநாட்டை நடத்த விடுதலை சிறுத்தை தீர்மானித்துள்ளது.

    இந்த மாநாடு பெண்கள் மட்டுமே பங்கேற்க கூடிய மாநாடாக ஒருங்கிணைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் பெண்களை திரட்டி இந்த மாநாட்டில் பங்கு பெற வைக்க விடுதலை சிறுத்தை இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதே போல கட்சியை மறுசீரமைப்பு செய்யவும் திருமாவளவன் முடிவு செய்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க ஏதுவாக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தீவிரமாக உள்ளார்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் விடுதலை சிறுத்தைக்கு பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தேர்தலை சந்திக்க திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

    எல்லா மாவட்டங்களிலும் விடுதலை சிறுத்தைக்கு பூத் கமிட்டி அமைக்க தொண்டர்கள் இருக்க வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு இப்போதே அதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதற்காக சட்டசபை தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் திருமாவளவன் முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை விடுதலை சிறுத்தை கட்சியில் 44 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே செயல்பட்டனர்.

    இந்த ஆண்டு அதனை 90 ஆக மாற்றி பிற அரசியல் கட்சிகளுக்கு இணையாக மாவட்ட செயலாளர்களை நியமித்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார்.

    வருகின்ற சட்டசபை தேர்தலை வலுவாக சந்திக்கும் வகையில் 234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளரை நியமிக்க அவர் முடிவு செய்துள்ளார். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 234 பேரை நியமித்து கட்சியை பலப்படுத்த வியூகம் அமைத்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற விகிதத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் திருமாவளவன் சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அதன் மூலம் தமிழகத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் விடுதலை சிறுத்தையை காலூன்ற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை முன்னெடுக்கிறார்.

    இதற்கான பணியினை செப்டம்பர் மாத மது ஒழிப்பு மாநாடு முடிந்தவுடன் தொடங்கவும் டிசம்பர் இறுதி வரை மேற்கொள்ளவும் அவர் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஜனவரி மாதம் முதல் "அதிகாரத்தை நோக்கி மக்களோடு திருமா" என்ற சுலோகத்தை மையமாக வைத்து கட்சிப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. ஜனவரியில் இருந்து திருமாவளவன் ஒவ்வொரு மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்கவும் முடிவு செய்துள்ளார்.

    வருகின்ற சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்கவும் போட்டியிடவும் அவர் இப்போதே அடித்தளம் அமைக்கிறார்.

    கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதல் இடங்களை பெற்று அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவதன் மூலம் விடுதலை சிறுத்தை கட்சி தலித் அல்லாதவர்களுக்கும் பொதுவான ஒரு கட்சி என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் புதிய மாற்றத்தை கொண்டு வரவும் திருமாவளவன் திட்டமிட்டுள்ளார்.

    இந்த லிங்கை கிளிக் செய்யவும்- எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க ஆட்சியில் இருந்த அரசுகள் தவறிவிட்டன- திருமாவளவன்

    Next Story
    ×