search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்- அரசு விரைவு பஸ்களில் 1 லட்சம் பேர் முன்பதிவு
    X

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்- அரசு விரைவு பஸ்களில் 1 லட்சம் பேர் முன்பதிவு

    • இந்த ஆண்டு முன்பதிவு வசதி பஸ்கள் அளவைவிட முன்பதிவு இல்லாத பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
    • கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் 20-ந்தேதி திறக்கப்படும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. 2 வருட கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த ஆண்டு பண்டிகையை உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் மக்கள் பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிட்டுள்ளனர். சிறப்பு ரெயில்கள் உள்பட அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன.

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட செல்வது வழக்கம். அந்த வகையில் வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக 21, 22, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இன்னும் தீபாவளிக்கு 10 நாட்களே இருப்பதால் பயணத்தை உறுதி செய்து வருகின்றனர். முதலில் அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களுக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடக்கிறது.

    சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் அரசு விரைவு பஸ்களின் முன்பதிவு 60 சதவீதம் முடிந்து விட்டது. மொத்தமுள்ள 1000 விரைவு பஸ்களில் 600 பஸ்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன.

    குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேர பஸ்களில் இடம் இல்லை. பகல் நேர பஸ்களில் மட்டுமே இடங்கள் காலியாக உள்ளன. சென்னையில் இருந்து செல்லக்கூடிய 450 பஸ்களில் இரவு நேர பஸ்கள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. பகல் நேர பஸ்களில் மட்டும் இருக்கைகள் நிரம்பாமல் உள்ளன.

    பொதுவாக கடைசி 3 நாட்களில் தான் முன்பதிவு அதிகரிக்கும். அந்த வகையில் 20, 21, 22-ந் தேதிகளில் முன்பதிவு மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. 21, 22, 23 ஆகிய 3 நாட்களுக்கும் சுமார் 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    அரசு விரைவு பஸ்களுக்கான முன்பதிவு முடிந்தவுடன் பிற போக்குவரத்து கழக பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கும். கடைசி 3 நாட்கள் மற்ற பஸ்கள் முன்பதிவுக்குள் கொண்டு வரப்படும். இந்த ஆண்டு முன்பதிவு வசதி பஸ்கள் அளவைவிட முன்பதிவு இல்லாத பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் முன்கூட்டியே பயணத்தை தொடர வேண்டும். நள்ளிரவில் வருவதை தவிர்க்க வேண்டும். 'பஸ் இல்லை' என்று சொல்லாத அளவிற்கு கூடுதலாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட், தாம்பரம், பூந்தமல்லி உள்ளிட்ட முக்கிய பஸ் நிலையங்களில் கடைசி நேர முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் 20-ந்தேதி திறக்கப்படும். அங்கு நேரடியாக சென்று முன் பதிவு டிக்கெட் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×