search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் மாநகரில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அதிரடியாக இடிப்பு

    • 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் இடத்தை காலி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கட்டிடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக மீட்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

    அவர்களது உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், சர்வேயர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது திருப்பூர் ஜம்மனை ஓடை பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள், பனியன் நிறுவனங்கள், டையிங் நிறுவனம், தங்கும் விடுதிகள், பிரிண்டிங் பிரஸ் குடோன் என 25க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் இடத்தை உடனடியாக காலி செய்யும்படி நோட்டீஸ் வழங்கினர். 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் இடத்தை காலி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை மாநகராட்சி உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி பொறியாளர் கோவிந்த பிரபாகர், திருப்பூர் வடக்கு தாசில்தார் கோவிந்தராஜன் மற்றும் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதிரடியாக இடித்தனர்.

    இதையடுத்து கட்டிடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் அவசர அவசரமாக வாகனங்களில் ஏற்றி மாற்று இடத்திற்கு கொண்டு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஜம்மனை ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் 25 உரிமையாளர்களுக்கு சொந்தமான 3 மற்றும் 4 மாடி கட்டிடங்கள் என சுமார் ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×