search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருத்தணி முருகன் கோவிலில் மாற்றுப்பாதை-வசதிகள் மேம்படுத்த ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது
    X

    திருத்தணி முருகன் கோவிலில் மாற்றுப்பாதை-வசதிகள் மேம்படுத்த ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது

    • இந்துசமய அற நிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்நிலையில் இது தொடர்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் வருவாய்த்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் இந்துசமய அற நிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதில் மாற்றுப்பாதைக்கான நிலங்களை கையகப்படுத்துதல், தொடர்புடைய துறைகளின் அனுமதியை பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.

    மேலும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், ராஜகோபுர இணைப்புப் பாதை, புதிதாக கட்டப்படுகின்ற 5 திருமண மண்டபங்கள், பணியாளர் நிர்வாக பயிற்சி கட்டிடம், யானை மண்டபம், மலைப் பாதை நிழல் மண்டபங்களின் கட்டுமான பணிகள், தங்கும் விடுதிகளை புனரமைக்கும் பணிகள், புதிய வெள்ளித்தேர் உருவாக்கும் பணி, மலைப் பாதையில் மின் விளக்குகள் அமைக்கும் பணி, திருக்குளங்களை அழகுப்படுத்தும் பணி ஆகியவை குறித்தும் அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் இசையரசன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், வேலூர் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் ராம் மோகன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்வத்பேகம், நெடுஞ் சாலைத்துறை கோட்டப் பொறியாளர் விஸ்வநாதன், உதவி கோட்டப் பொறியாளர் அன்பரசு, கோவில் துணை ஆணையர் விஜயா, வனச்சரக அலுவலர் அருள்நாதன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×