search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Mullaperiyar Dam
    X

    மழை குறைந்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வதில் சிக்கல்

    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
    • லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்ததால் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது.

    இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைக்கு நீர்வரத்தும் சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 131.55 அடியாக உள்ள நிலையில் வரத்து 2483 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 5059 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    கனமழை பெய்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக பகுதிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைகள் நடமாட்டம் காரணமாக 2 நாட்கள் தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுருளி அருவியில் புனித நீராட வந்தனர்.

    ஆனால் தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாளை ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் சுருளி அருவி மற்றும் முல்லைப்பெரியாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். எனவே நாளை சுருளி அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படுமா? என அவர்கள் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

    Next Story
    ×