search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் ஆணையம் எச்சரிக்கை: பணப்பட்டுவாடாவை தடுக்காவிட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்
    X

    தேர்தல் ஆணையம் எச்சரிக்கை: பணப்பட்டுவாடாவை தடுக்காவிட்டால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்

    • தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக போலீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • வாகன சோதனையை அதிகப்படுத்த கூடுதல் இடங்களில் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 27, 28-ந்தேதிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் அதிகாரிகள் சென்னை வந்தனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்யப்பட்டு இருக்கும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் விவாதித்தனர். அரசியல் கட்சி பிரமுகர்களையும் அழைத்து கருத்து கேட்டனர்.

    இந்த ஆய்வு கூட்டத்தின் போது தேர்தல் ஆணையர் தமிழ்நாட்டில் முந்தைய தேர்தல்களில் இலவசப் பொருட்கள் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார். பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகார்கள் குறித்தும் பேசினார்.

    இந்த தடவை தேர்தலில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்பட்டாலோ அல்லது பணப்பட்டுவாடா செய்யப்பட்டாலோ அந்த பகுதிக்குரிய தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    பணப்பட்டுவாடா செய்யப்படுவது வீடியோ ஆதாரம் மூலம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த தொகுதியை கண்காணிக்கும் போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.

    நடவடிக்கைகளில் இருந்து தப்ப வேண்டுமானால் பணப்பட்டுவாடா செய்யப்படுவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி தடுத்து நிறுத்துங்கள் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக் கொண்டார். பணப்பட்டு வாடாவை கட்டுப்படுத்த போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கள் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படைகளை திறமையுடன் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

    ஏதாவது தேர்தல் அதிகாரி மீதோ, போலீஸ் அதிகாரி மீதோ திருப்தி ஏற்படாவிட்டால் அதிரடியாக மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி ராஜீவ் குமார் எச்சரித்தார். இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் இலவசப் பொருட்கள் வினியோகம் மற்றும் பணப்பட்டுவாடாவை எப்படி தடுப்பது என்பது குறித்து தமிழக போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பணப் பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக போலீசில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் வாகன சோதனையை அதிகப்படுத்த கூடுதல் இடங்களில் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×