search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடை காலம் முடிந்த பிறகும் பொதுமக்களுக்கு ஷாக் கொடுக்கும் மின்சார கட்டணம்
    X

    கோடை காலம் முடிந்த பிறகும் பொதுமக்களுக்கு "ஷாக்" கொடுக்கும் மின்சார கட்டணம்

    • காற்றோட்ட வசதி இல்லாததால் நகர மக்கள் ஏ.சி. படுக்கை வாழ்க்கைக்கு மாறி விட்டனர்.
    • கடந்த ஆகஸ்டை ஒப்பிடும்போது ஒவ்வொரு குடும்பத்திலும் மின் பயன்பாடு அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. 2 கோடியே 41 லட்சம் பேர் வீடுகளுக்கான மின் இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதில் 97 லட்சம் குடும்பத்தினர் 100 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவதால் அவர்களுக்கு கட்டணம் கிடையாது. முதல் 100 யூனிட் தவிர இலவச மின்சாரம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    101-200 யூனிட் வரை ரூ.2.25, 401-500 யூனிட் வரை ரூ.6, 501-600 வரை ரூ.8 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.

    801-1000 யூனிட் பயன்படுத்துவோருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படுவதால் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணமாக ரூ.10 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வேண்டும்.

    மின்கட்டண உயர்வு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.5 ஆயிரம், 10 ஆயிரம் என பெரும் தொகை கட்டுகின்ற நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

    ரூ.2 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என்ற அளவில் மின் கட்டணம் செலுத்தி வந்த சாதாரண மக்கள் தற்போது தங்களின் வருவாயில் பெரும் தொகையை மின் கட்டணத்திற்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னையில் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மாத சம்பளம் வாங்கக்கூடியவர்கள் வருமானத்தில் மின் கட்டணத்திற்கு பல ஆயிரங்களை செலவிடும் நிலை உள்ளது.

    கடந்த ஆகஸ்டை ஒப்பிடும்போது 2 மடங்கு மின் கட்டணம் உயர்ந்து இருப்பதாக கூறுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் ஏ.சி. பயன்பாடு என்று கூறப்படுகிறது. சொந்த வீடுகளில் வசிப்பவர்கள் மட்டுமின்றி வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களும் ஏ.சி. எந்திரத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். சென்னை நகரத்தில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியால் ஒட்டி கட்டப்பட்டுள்ள வீடுகளில் மட்டுமின்றி 90 சதவீத வீடுகளில் ஏ.சி. பயன்படுத்தப்படுகிறது.

    காற்றோட்ட வசதி இல்லாததால் நகர மக்கள் ஏ.சி. படுக்கை வாழ்க்கைக்கு மாறி விட்டனர். அதுவும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் கோடை வெயில் படிப்படியாக குறைந்து விடும்.

    ஆனால் இந்த வருடம் செப்டம்பர் வரை வெயில் கொளுத்தி வருகிறது. மாறுபட்ட தட்ப வெப்ப சூழலால் மக்கள் ஏ.சி.யை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

    கடந்த ஆகஸ்டை ஒப்பிடும்போது ஒவ்வொரு குடும்பத்திலும் மின் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதுவே மின் கட்டண உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சாதாரண வீடுகளில் உள்ள மக்கள் முதல் பண்ணை வீடுகளில் வசிக்கும் மக்கள் வரை மின் கட்டண உயர்வு பாதித்து உள்ளது. பனையூரில் பண்ணை வீட்டில் வசிக்கும் ஒருவர் கடந்த ஆண்டு மே மாத மின் கட்டணம் ரூ.60 ஆயிரம் செலுத்தி உள்ளார். அதே அளவில் தான் இந்த ஆண்டு பயன்படுத்தி உள்ளார். ஆனால் மின் கட்டணம் ரூ.1 லட்சமாக உயர்ந்து உள்ளது.

    மின் கட்டண உயர்வால் மின் வாரியத்திற்கு வருவாய் அதிகரித்து உள்ளது. மே மாதம் மின்வாரியத்திற்கு மின் கட்டண வசூல் தொகை ரூ.939 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த வருடம் ரூ.737 கோடி வசூலாகி உள்ளது. மின் கட்டண சிலாப்புக்கான மாறுபாட்டால் பலர் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. வீடுகளில் இருந்து பணியாற்றி வருபவர்கள் ஏ.சி.யை அதிகம் பயன்படுத்துகிறார்கள். பருவமழை தொடங்க உள்ள நிலையில் கூட பகலில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின் பயன்பாடு அதிகளவில் நீடித்து வருகிறது.

    இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு. மாறுபட்ட கால சூழ்நிலையால் ஏ.சி. பயன்பாடு அதிகமாக இருப்பதால் கட்டணம் அதற்கேற்றவாறு மாறுபடுகிறது.

    இந்த ஆண்டு கோடையில் அதிகபட்சமாக 19,587 மெகா வாட் மின் பயன்பாடாக இருந்தது தற்போது ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதால் மின் பயன்பாடு 16 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×