search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதன தர்மத்தில் தீண்டாமை என்பது கிடையாது- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
    X

    சென்னை திருவல்லிக்கேணி ராகவேந்திரா மடத்தின் 50-வது ஆண்டுவிழாவை கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    சனாதன தர்மத்தில் தீண்டாமை என்பது கிடையாது- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

    • பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம்.
    • ஒரு காலத்தில் இந்தியாவின் பேச்சை மற்ற நாடுகள் கவனிக்காது, ஆனால் இப்போது நமது பிரதமர் பேசும் போது உலகமே உற்றுப் பார்க்கிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தின் 50-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி அங்கு கட்டப்பட்டுள்ள பொன் விழா அரங்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மடத்தின் தலைவர் சுபுதேந்திர தீர்த்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் உருவானது. பாரதம் உருவான போதே சனாதன தர்மமும் உருவானது. அது வாழையடி வழையாக ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது. அதன் ஒளியும் தலைமுறைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே பாரதம் என்றுதான் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகுதான் ஆங்கிலம்தான் உயர்ந்தது என்றும், அவர்களுடைய கலாச்சாரம்தான் சிறந்தது என்றும் பரப்ப தொடங்கினார்கள்.

    நமது அரசியலமைப்பு வரை படத்தில் கூட குருகுல காட்சிகள்தான் இடம் பெற்று உள்ளன. ஆனால் ஆங்கிலேயர்கள்தான் பிரிவினைவாதங்களை தொடங்கி வைத்தார்கள். 1947-க்கு பிறகு தான் இந்தியாவே உருவானது போல சிலர் சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது.

    நமது இந்த புனிதமான மண்ணில் எத்தனையோ மகான்கள் பிறந்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்.

    ராமானுஜர், அரவிந்தர் அந்த வரிசையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த ராகவேந்திரரும் ஒருவர். அந்த மகான்கள் உலகம் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்று தான் பாடுபட்டார்கள். அதை தான் மக்களிடம் பரப்பினார்கள். பாரதமும், சனாதனதர்மமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதை பிரிக்க முடியாது.

    பாரதம் உயர்ந்தால் சனாதன தர்மமும் உயரும். தாழ்ந்தாக சனாதன தர்மமும் தாழும். சனாதன தர்மம் என்பது எல்லோரும் சமம் என்பதுதான். இதில் வேற்றுமை கிடையாது.

    எல்லோரையும் ஒரே குடும்பமாகதான் சொல்கிறது. மனிதர்கள் நிறத்தில் மாறுபட்டாலும் மனிதர்கள் என்பதை போலத்தான் சனாதன தர்மமும்.

    பாரதம் வலிமையான நாடாக இருக்க வேண்டும். அதற்காகதான் தயாராகி கொண்டு இருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியாவின் பேச்சை மற்ற நாடுகள் கவனிக்காது, ஆனால் இப்போது நமது பிரதமர் பேசும் போது உலகமே உற்றுப் பார்க்கிறது.

    நமது பிரதமர் பாரதத்தின் நாடி துடிப்பை அறிந்து வைத்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது சுதந்திரம் கிடைத்து 100 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

    இதற்கு மடங்கள், மக்கள் எல்லோரது பங்களிப்பும் வேண்டும். ஆன்மீகத்துடன் சேர்ந்தே பாரதம் வளர வேண்டும்.

    தமிழகம் புனிதமான பூமி. சென்னையும் அழகான நகரம். இங்கு ஆங்காங்கே கழிவுநீர் ஓடுகிறது. ஓடைகள் திறந்து கிடக்கிறது. அவைகளையெல்லாம் சீர்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

    நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான சென்னை கிளை உறுப்பினர் சேகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×