search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
    • மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து நேற்றுமாலை 140 அடியை எட்டியது. இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறையினர் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினர்.

    இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து ஆகிய பகுதிகளில் உள்ள பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக உள்ளது.

    அணைக்கு விநாடிக்கு 1817 கனஅடி நீர்வருகிறது. நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் வகையில் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்இருப்பு 7221 மி.கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 141 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன்பிறகு உபரிநீர் 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு திறக்கப்படும்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குபிறகு இதுவரை 5 முறை அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இன்றுகாலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக 800 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இன்றுகாலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 69.59அடியாக உள்ளது. நீர்வரத்து 1961 கனஅடி, தண்ணீர் திறப்பு 2599 கனஅடி, நீர்இருப்பு 5724 மி.கனஅடி.

    மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெரியாறு 3, தேக்கடி 8.4, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.4, சண்முகா நதிஅணை 4, மஞ்சளாறு 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வீரபாண்டி 4, மி.மீ மழைளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×