search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டும் கேரள வனத்துறை
    X

    தமிழக பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டும் கேரள வனத்துறை

    • திராட்சை தோட்டங்கள், பழியன்குடி மலை அடிவாரப்பகுதி என சுற்றிக்காட்டி வருகின்றனர்.
    • மாட்டு வண்டி சுற்றுலாவை தமிழக வனத்துறையின் ஆசியோடு செய்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்ட எல்லையையொட்டி கேரளாவில் பெரியாறு புலிகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகம் மூலம் தேக்கடியில் யானை சவாரி, படகு சவாரி, டிரக்கிங் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் அம்மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. பல கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும் வருவாயை பெருக்கும் வகையிலும், வடமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலும், மாட்டு வண்டி சவாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    இதற்கான அலுவலகத்தை தமிழக பகுதியான லோயர்கேம்ப் அருகே காஞ்சிமரத்துறையில் தொடங்கி மாட்டு வண்டி மூலம் திராட்சை தோட்டங்கள், பழியன்குடி மலை அடிவாரப்பகுதி என சுற்றிக்காட்டி வருகின்றனர். கேரளாவில் உள்ள பெரியாறு புலிகள் காப்பகம் எவ்வித அனுமதியின்றி தமிழக பகுதியில் கிளை அலுவலகத்தை செயல்படுத்த வருவதற்கு தமிழகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர் என்று விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தெரிவிக்கையில், கேரளாவை மையமாக கொண்ட பெரியாறு புலிகள் காப்பக்கம் அத்துமீறி தமிழக பகுதியில் 2 கட்டிடங்களை கட்டி அங்கு கேரள ஊழியர்களையும் தங்க வைத்துள்ளது. பெரியாறு அணைக்கு செல்லும் வழியான தேக்கடி மற்றும் வல்லக்கடவில் கேரள வனத்துறை சோதனைச்சாவடி அமைத்து அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாத வகையில் கெடுபிடி செய்கின்றனர். அதே வேளையில் தமிழக பகுதிக்குள் எவ்வித அனுமதியின்றி கட்டிடங்களை கட்டி மாட்டு வண்டி சுற்றுலாவை தமிழக வனத்துறையின் ஆசியோடு செய்து வருகின்றனர்.

    எனவே இந்த அலுவலகத்திற்கு உடனடியாக சீல் வைக்கா விட்டால் விவசாயிகள் சங்கத்தினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும் என்றார்.

    Next Story
    ×