என் மலர்
தமிழ்நாடு
உடுமலை-மூணாறு சாலையில் குட்டிகளுடன் உலா வரும் யானைகள்... வனத்துறையினர் எச்சரிக்கை
- கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வனப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
- யானைகள் குட்டிகளுடன் காலை நேரத்தில் உடுமலை-மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வனப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியுள்ளது. ஆனால் ஆறுகளில் நிலையான நீர்வரத்து இல்லாததால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொடர்ந்து அமராவதி அணை பகுதியில் முகாமிட்டு வருகின்றன.
மேலும் யானைகள் குட்டிகளுடன் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. எனவே யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.