search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தர்மயுத்தம் முதல் அதிகார யுத்தம் வரை... ஓ.பி.எஸ். எதிர்காலம், ஒளி மங்குகிறதா?
    X

    தர்மயுத்தம் முதல் அதிகார யுத்தம் வரை... ஓ.பி.எஸ். எதிர்காலம், ஒளி மங்குகிறதா?

    • சட்டப்போராட்டம் மூலம் கட்சியை கைப்பற்றி விடலாம் என்ற ஓ.பி.எஸ்சின் கணக்கு எடுபடாமல் போய்விட்டது.
    • எவ்வளவோ குடைச்சல் கொடுத்தவர்களை கூட ஜெயலலிதா மன்னித்து ஏற்றுக்கொண்ட வரலாறு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது.

    தர்ம யுத்தத்தில் தொடங்கி அதிகார யுத்தம் வரை போர்க்கள காட்சிகள் வேகமாகவும், விறு விறுப்பாகவும் நகர்ந்தாலும் முடிவு எப்படி அமையும் என்பது தான் தற்போதைய இறுதி கட்டத்தின் எதிர்பார்ப்பு. கிட்டத்தட்ட நிராயுதபாணி என்ற நிலையில் தான் போர்களத்தில் ஓ.பி.எஸ்.-ன் நிலை உள்ளது.

    எம்.ஜி.ஆர்... அதற்கு அடுத்ததாக ஜெயலலிதா ஆகியோரைப்போல் ஆளுமையும், செல்வாக்கும், மிக்க தலைமை அ.தி.மு.க.வுக்கு கிடைக்காமல் போனாலும் அந்த இயக்கத்தை கட்டி காப்பதற்கு ஒரு தலைமை வேண்டும் என்ற ஏக்கம் அந்த இயக்கத்தின் மீது பற்று கொண்ட ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும். அதனால் தான் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை தலைமையேற்று வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

    இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என்று எல்லோரும் சேர்ந்து தான் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள். முதல்வர் பதவி என்பது சும்மாவா? வாய்ப்பு கிடைத்தால் யாராக இருந்தாலும் அதை அனுபவிக்கத்தான் முயற்சிப்பார்கள். அந்த வகையில் அடுத்த கட்டமாக சசிகலாவும், முதல்வர் பதவியை நோக்கி நகர தொடங்கியதும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பிரச்சினை வந்தது. பதவியை துறக்கும்படி சசிகலா தரப்பினர் நெருக்கடி கொடுக்கவே அவரும் துறக்க வேண்டிய கட்டாயம் ஆயிற்று.

    வேறு வழி தெரியாமல் சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை ஜெயலலிதா சமாதியில் இருந்து தொடங்கினார். அந்த யுத்த முழக்கம் எதிர்தரப்பை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. முதல்வர் முடிசூட சசிகலா தயாரானார். எம்.எல்.ஏ.க்கள் கழன்று விடாமல் இருப்பதற்காக கூவத்தூரில் சிறைபடுத்தினார்கள். சசிகலா கணக்கு இப்படி இருக்க இன்னொரு பக்கம் அவருக்கு எதிரான கணக்கு வேறு விதமாக முடிவு செய்யப்பட்டது.

    சொத்து குவிப்பு என்ற அஸ்திரம் இன்னொரு திசையில் இருந்து பறந்து வந்து மொத்தத்தையும் துவம்சம் செய்தது. சசிகலாவின் கனவு தகர்ந்தது. சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது தனது விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு அவர் ஜெயிலுக்கு சென்றார். முதல்வராக அறிவிக்கப்பட்டாலும் சட்ட சபையில் பலத்தை நிரூபிக்க வேண்டிய நடைமுறை வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். ஆனால் ஓ.பி.எஸ். தரப்பினர் நடுநிலை வகித்தார்கள்.

    இ.பி.எஸ் தலைமையில் ஆட்சி தேர் சரியான திசையில் நகர்ந்தது. ஆனால் இ.பி.எஸ்க்கும், டி.டி.வி. தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட பிணக்குகளின் காரணமாக டி.டி.வி. தினகரன் தனியாக பிரிந்தார். ஆக அ.தி.மு.க. 3 அணிகளானது. தினகரனை பொறுத்தவரை தனி கட்சியாகவே தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.

    எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல இ.பி.எஸ்சுக்கும், ஓ.பி.எஸ்சுக்கும் டி.டி.வி தினகரன் பொது எதிரியாக இருந்ததால் இருவரும் இணைந்து கட்சியை வலுப்படுத்தலாம். நம்முடைய பலத்தையும் பெருக்கி கொள்ளலாம் என்று திட்டம் வகுத்தார்கள். அதன் விளைவாக இ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்சும் கைகோர்த்தார்கள்.

    பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவை தூக்கினார்கள். ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும், இணை ஒருங்கி ணைப்பாளரும் எடப்பாடி பழனிசாமியும் புதிய பதவிகளோடு கட்சியை புதிய பாதையில் வழிநடத்த தொடங்கினார்கள். முதல்வராக இ.பி.எஸ், துணை முதல்வராக ஓ.பி.எஸ் என்று கட்சியும், ஆட்சியும் 5 ஆண்டுகளை நிறைவு செய்தது.

    ஒற்றை தலைமையாக இருந்தால் தான் கட்சியை சரியாக நடத்த முடியும் என நினைத்து ஒற்றை தலைமைக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி என்ற நிலை வந்ததும் தனது அதிகாரம் குறைந்து விடும் என கருதிய ஓ.பன்னீர்செல்வத்தால் ஒற்றை தலைமை என்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    சமாதானமாக பேசியும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற ரீதியில் எடப்பாடி பழனிசாமி களம் இறங்கினார். பொதுக்குழுவை கூட்டி யாருக்கு ஆதரவு என்பதை நிரூபித்து விடுவோம் என்று கங்கணம் கட்டி இ.பி.எஸ் களம் இறங்கினார். கடந்த ஜூன் 23-ந் தேதி பொதுக்குழு என்று தேதி குறிக்கப்பட்டது. அன்றைய பொதுக்குழுவில் இ.பி.எஸ்சை பொதுச் செயலாளராக அதாவது ஒற்றை தலைமைக்கு கொண்டு வருவதற்காக முயற்சிகளை முன் எடுத்தனர். இதை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட ஓ.பி.எஸ் பொதுக்குழுவுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விடிய விடிய கோர்ட்டில வழக்கு விசாரணை நடந்தது. ஏற்கனவே விவாதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும். புதிதாக எந்த பதவி தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்ற கோர்ட்டு உத்தரவோடு அந்த பொதுக்குழு கூடியது. ஆனால் பொதுக்குழுவில் அத்தனை தீர்மானங்களையும் நிராகரிப்பதாக கூறி விட்டு ஜூலை 11-ந் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டது.

    அந்த பொதுக்குழு வானகரத்தில் நடந்து கொண்டு இருந்த போது தலைமை கழகத்துக்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் புகுந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது.

    இதனால் அ.தி.மு.க. அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. மீண்டும் வழக்கு கோர்ட்டுக்கு சென்றது. வழக்கை விசாரித்த தனி நீதிபதியின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திறகு சாதகமாக வந்தது. ஆனால் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் அலுவலகத்தின் சீலை உடனடியாக அகற்ற உத்தரவிட்டதோடு பொதுக்குழு செல்லும் என்றும் அறிவித்தது. அலுவலக சாவியையும் இ.பி.எஸ்சிடம் வழங்க உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததிலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே தீர்ப்பு அமைந்துள்ளது. தலைமை கழகத்தின் சாவி இ.பி.எஸ்சிடம் ஒப்படைக்கப்பட்டது சரிதான் என்று அறிவிக்கப்பட்டது. கட்சி, அலுவலகம் எல்லாம் இ.பி.எஸ். வசமாகி இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமியின் பக்கம் எம்.எல்.ஏ.க்களின் பலமும் அதிகமாக உள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களும் 90 சதவீதத்திற்கும் மேல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் சட்டத்தின் துணை கொண்டு அதாவது சட்டப்போராட்டம் மூலம் கட்சியை கைப்பற்றி விடலாம் என்ற ஓ.பி.எஸ்சின் கணக்கு எடுபடாமல் போய்விட்டது.

    சசிகலா, டி.டி.வி. தினகரன் எல்லோரும் அ.தி.மு.க.வுக்கு வர வேண்டும் என்று புதிய முயற்சியை மேற்கொண்டும் பார்த்தார். அதுவும் எடுபடாமல் போனது. இப்போது தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை பெரும்பாலானோர் இ.பி.எஸ் பக்கம் இருக்கிறார்கள்.

    சட்டமும், இ.பி.எஸ்சுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்து இருக்கிறது. அதாவது கொஞ்சம், கொஞ்சமாக ஓ.பி.எஸ்சின் கை பலவீனமாகி வருகிறது.

    இப்போது அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரை நம்பி இருக்கும் சிலரிடம் எழுந்துள்ளது.

    பா.ஜனதா கைகொடுக்கும் என்ற எண்ணமும் நிறைவேறவில்லை. பா.ஜனதாவை பொறுத்தவரை தமிழகத்தில் வலுவாக கால் பதிக்க போராடிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கட்சியில் பிளவுகள் ஏற்படுவதால் தனக்கு பலன் கிடைக்குமா என்பதை தான் எதிர்பார்க்கும். எனவே பா.ஜனதாவும் இந்த விஷயத்தில் நைசாக நழுவிவிட்டது. இப்போதைய நிலையில் போர்க்களத்தில் நிராயுதபாணியாக ஓ.பி.எஸ் நிறுத்தப்பட்டுள்ளார். அடுத்து அவர் எடுக்கப்போகும் முடிவை பொறுத்து தான் அவரது எதிர்காலமும், அவரை நம்பியிருக்கும் சிலரது எதிர்காலமும் அமையும்.

    துணை முதல்வர் என்ற உயர்ந்த பொறுப்பில் இருந்தவர் இனி மாற்று கட்சிகளில் இணைவது சாத்தியம் இல்லை. அப்படி ஒரு அக்னி பரீட்சைக்கு அவரும் தயாராக மாட்டார். அவருக்கு இருக்கும் ஒரே வழி சண்டை வேண்டாம். சமரசமாக போய்விடுவோம் என்று சொல்வதாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    இப்போதைய சூழ்நிலையில் இவ்வளவு குடைச்சல் கொடுத்த ஓ.பி.எஸ். மன்னிப்பு கேட்டாலும் கட்சியில் சேர்ப்பதில்லை என்று இ.பி.எஸ் தரப்பு கூறினாலும் சூழ்நிலைகள் மாற வாயப்பு உண்டு என்கிறார்கள்.

    இதை விட எவ்வளவோ குடைச்சல் கொடுத்தவர்களை கூட ஜெயலலிதா மன்னித்து ஏற்றுக்கொண்ட வரலாறு அ.தி.மு.க.வுக்கு இருக்கிறது. எனவே இ.பி.எஸ் தலைமையை ஏற்று ஓ.பி.எஸ் கட்சிக்கு வந்தால் நிச்சயம் இ.பி.எஸ் ஏற்றுக்கொள்வார், ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். தொண்டர்களும் அதைத்தான் விரும்புவார்கள் என்கிறார்கள்.

    தன் பக்கம் நிர்வாகிகள் சாய்வார்கள் என்று காத்திருந்ததுதான் மிச்சம். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து யாரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் செல்லவில்லை.

    தென் மாவட்டங்களின் தனக்கென்று தனி செல்வாக்கு இருப்பதாக காட்டிக் கொண்டாலும் அதை வெளிப்படையாக காட்ட தவறி விட்டார். பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என்று எதையும் முன்னெடுக்கவில்லை. சமுதாய ரீதியாக கட்சியினரை திரட்ட எடுத்த முயற்சிகளும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்ட கட்சி. தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டையே தொடர்ந்து கடைபிடித்தும் வருகிறது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மறைந்த கருணாநிதியின் பெருமைகளை புகழ்ந்தும், தொடர்ந்து தி.மு.க.வின் சில செயல்பாடுகளை பாராட்டியதும் கட்சியினர் மத்தியில் வெறுப்பை சம்பாதிக்க வைத்தது.

    அரசியலில் இப்போதைய நிலையில் அதிர்ஷ்ட காற்று திசை மாறியே வீசுகிறது. எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் மங்குமா? பிரகாசிக்குமா? என்பதை வரும் காலம்தான் நிர்ணயிக்கும். அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதுதானே யதார்த்தம்.

    Next Story
    ×