search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் மாவட்டங்களில் கனமழை: மருத்துவக் கட்டமைப்பை உறுதிசெய்ய உத்தரவு
    X

    தென் மாவட்டங்களில் கனமழை: மருத்துவக் கட்டமைப்பை உறுதிசெய்ய உத்தரவு

    • மருத்துவமனைகளில் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்து அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
    • வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றுவதற்கு வசதியாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

    பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தென் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வானிலை மைய முன்னெச்சரிக்கையின்படி பெரு மழை பாதிப்புகளைத் தவிா்க்க அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளும் பேரிடா் மேலாண்மைத் திட்டங்களை தேவையின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்து அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

    மருத்துவமனைகளில் தடையற்ற மின்சேவை இருப்பதை உறுதி செய்தல் அவசியம். குறிப்பாக, தீவிர சிகிச்சை பிரிவுகள், அதி தீவிர சிகிச்சை பிரிவுகள், அறுவை சிகிச்சை அரங்குகள், குளிா்பதன மருத்துவக் கட்டமைப்புகளில் மின்சார சேவைகள் இடா்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மின் பழுதுகளை சீர மைக்க முடியாத தருணங்களில் அவசர சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளை வேறு மருத்துவ மனைகளுக்கு மாற்றுவதற்கு வசதியாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை தயாா் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். அவசர கால மருத்துவ சிகிச்சைகளில் தாமதம் ஏற்படாத வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களை போதிய எண்ணிக்கையில் பணியில் ஈடுபடுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகங்களுக்கு மாவட்ட இணை சுகாதார இயக்குநா்கள் அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

    மழை பாதித்த இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கி உள்ளோருக்கு சிகிச்சை வழங்கும் வகையில் மருத்துவக் குழுக்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    பருவ மழைக் காலத்தில் பரவும் காய்ச்சல், வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, இன்ப்ளூயன்ஸா தொற்று, மூளைக் காய்ச்சல் பாதிப்பு களைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்தவும், அதுகுறித்த தகவல்களை உடனுக்குடன் அரசுக்குத் தெரிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×