என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
'லேக் பிரண்ட் ரீ கனெக்ட்' எனப்படும் ஏரி வடிவமைப்பு போட்டி: ஏப்ரல் 17-ந்தேதிக்குள் வடிவமைப்புகளை சமர்ப்பிக்க வேண்டும்
- தகுதியான கட்டிட கலைஞர், சிவில் என்ஜினீயரை கொண்ட நிறுவனங்கள் பங்கேற்கலாம்
- சென்னையில் 10 ஏரிகளை ரூ.100 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்வதற்கான வடிவமைப்பு போட்டியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது.
சென்னை:
மழை நீரை சேகரித்து குடிநீர் ஆதாரத்தை உருவாக்கி தருவதோடு, நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதில் ஏரிகளும், குளங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் சென்னையில் ஏரிகளில் வீடுகள் கட்டுவதும், குப்பைகள் கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் சென்னையில் ஏரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 20 ஏரிகள் உள்ளன. இவற்றில் பல ஏரிகள் ஆக்கிர மிக்கப்பட்டிருப்பதோடு குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன. இதனால் ஏரிகளின் பரப்பளவு சுருங்கி வருவதோடு சென்னையில் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
சென்னை நகரின் குடிநீர் ஆதாரம் மற்றும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்கும் வகையில் சென்னையில் ஆக்கிரமிப்புகள் போக எஞ்சியுள்ள ஏரிகளையாவது முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சென்னையில் 10 ஏரிகள் ரூ.100 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இதற்கான 'லேக் பிரண்ட் ரீ கனெக்ட்' எனப்படும் ஏரி வடிவமைப்பு போட்டியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் பெரும்பாக்கம், ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், புழல், கொளத்தூர் ஆகிய ஏரிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. இந்த ஏரி கள் ஆக்கிரமிப்புகள் காரணமாகவும், பராமரிப்பு இல்லாததாலும் அதன் கட்டமைப்பை இழந்துவிட்டன.
எனவே இந்த ஏரிகளும், அதன் முகப்பு பகுதிகளும் சீரமைக்கப்படுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒரு தகுதி வாய்ந்த கட்டிட கலைஞர், இயற்கை சார்ந்த கட்டிட கலைஞர், சிவில் என்ஜினீயர் ஆகியோரை கொண்டிருப்பதுடன் மற்ற துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு ஏரிக்கான வடிவமைப்புகளை உருவாக்கி வருகிற ஏப்ரல் 17-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியின் முடிவுகள் வெளியான பிறகு திட்டங்களுக்கான டெண்டர் வருகிற ஜூன் மாதம் இறுதி செய்யப்படும்.
இந்த ஏரிகள் அனைத்திற்கும் பொதுவாக இருக்க வேண்டிய சில அம்சங்களில் திறந்த வெளிகளும் அடங்கும். தற்போதைய ஏரியின் தன்மை, நிலத்தின் அளவு, சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு ஏற்றதா என ஆய்வு செய்யப்படும். ஏரி அமைப்பு, முகப்பு தோற்றம், பறவைகளுக்கான வசதிகள், கலை நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் ஆகிய அனைத்தும் இதன் கட்டமைப்புகளில் ஒரு பகுதியாக இருக்கலாம்.
நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சி கூடம், ஏரியின் எல்லை மேம்பாடு, தூய்மையான கரை பகுதிகள், தோட்டங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள், வாகன நிறுத்தும் வசதிகள், ஆம்பி தியேட்டர்கள், உணவகம், நீர் விளையாட்டுகள், மீன்பிடிதளம், விளையாட்டு பகுதி பொது வசதி, படகு சவாரி போன்ற வடிவமைப்புகளும் இடம் பெற வேண்டும். இந்த ஏரிகள் பொழுதுபோக்கு மற்றும் பொருளாதார சேவைகளுக்கான வாய்ப்பையும் கொண்டிருக்க வேண்டும்.
இந்த ஏரிகளில் தண்ணீ ரை சேமித்து வைப்பதன் மூலம் சென்னையின் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். மேலும் கோடை காலத்தில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.
இந்த போட்டியில் பங்கேற்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு ஏரியின் தனித்துவமான இடம் மற்றும் இயற்கை அம்சங்களை கருத்தில் கொண்டு வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்