search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கே.கே.நகரில் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மைய கட்டிடத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
    X

    கே.கே.நகரில் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் புதிய ஒப்புயர்வு மைய கட்டிடத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

    • இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.
    • மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.

    சென்னை:

    சென்னை கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையானது, மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனையாகும். இந்தியாவிலேயே மிகப்பெரிய மற்றும் நவீன செயற்கை மூட்டு சிகிச்சை அளிக்கும் தலைசிறந்த புனர்வாழ்வு மையங்களில் இதுவும் ஒன்றாகும்.

    மருத்துவ சேவை, சமூக மற்றும் தொழில் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த அனைத்து சேவைகளும் இங்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    இம்மருத்துவமனை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் ஒரு அங்கம் ஆகும். 1960-ம் ஆண்டு முதன் முதலில் எலும்பு முறிவு சிகிச்சையின் கீழ் உட்பிரிவாக அரசு பொது மருத்துவமனையில் உடல் இயக்கவியல் மருத்துவம் மற்றும் புனர்வாழ்வு துறை (பி.எம்.ஆர்.) தோற்றுவிக்கப்பட்டது. விரிவான இடவசதி கருதியும், மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வு தொடர்பான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் பொருட்டும் சென்னை, கே.கே. நகரில் அரசு புனர்வாழ்வு மருத்துவமனை மாற்றப்பட்டது.

    இம்மருத்துவமனை மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் தொழில்முறை சிகிச்சை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த புனர்வாழ்வு மையம் ஆகும்.

    இம்மருத்துவமனையில், 60 படுக்கைகள் கொண்ட ஆண்கள், பெண்கள் மற்றும் உறுப்பு துண்டித்தல் ஆகிய மூன்று உள்நோயாளிகள் பிரிவுகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன. இம்மருத்துவமனையில் நாள்தோறும் 250 புறநோயாளிகளும், 30 உள்நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.28 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டிடடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    ஒப்புயர்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை பயிற்சி வசதிகள், இயன்முறை பயிற்சி, மின்முறை சிகிச்சை ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் சிகிச்சை வசதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    மேலும், அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள கருவிகளையும் பார்வையிட்டார்.

    இப்புதிய ஒப்புயர்வு மையத்தின் மூலம் 60 படுக்கைகள் கொண்ட இம்மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, பக்கவாதம், முதுகுத் தண்டு காயம், மூளைக் காயம், பெருமூளை வாதம், தசைக்கூட்டு கோளாறு நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இத்திறப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், இலவச செயற்கை அவயங்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச அதிநவீன செயற்கை உபகரணங்கள், இலவச சக்கர நாற்காலிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, ஏ.எம்.வி. பிரபாகர ராஜா எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×