என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![வெளிநாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத பயிற்சிக்கு தயாரான முபின்-17 கூட்டாளிகள்: திடுக்கிடும் தகவல்கள் வெளிநாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத பயிற்சிக்கு தயாரான முபின்-17 கூட்டாளிகள்: திடுக்கிடும் தகவல்கள்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/29/1783521-mubin.jpg)
வெளிநாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத பயிற்சிக்கு தயாரான முபின்-17 கூட்டாளிகள்: திடுக்கிடும் தகவல்கள்
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- ஐ.எஸ்.ஏ. பயங்கரவாத பயிற்சிக்கு திட்டமிட்ட 18 பேரில் முபின் மட்டும் உயிரிழந்து இருக்கிறார்.
- முபினின் கூட்டாளிகள் 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
சென்னை:
கோவையில் கடந்த 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பற்றிய பரபரப்பு இன்னும் அடங்காமல் உள்ளது. காரில் சிலிண்டர்கள், வெடி குண்டுகளை கடத்தி சென்று சதி வேலையில் ஈடுபட கோவை உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் முயற்சி செய்து இருந்தார்.
கார் வெடிப்பில் அவர் உயிர் இழந்த நிலையில் இந்த நாசவேலை சதி திட்டம் தொடர்பாக அவனது கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை போலீசார் நடத்தி வந்த இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கோவை போலீசாரிடம் இருந்து கார் வெடிப்பு வழக்கு தொடர்பான தகவல்களையும் சேகரித்து வைத்து உள்ளனர். கடந்த சில நாட்களாக கோவையில் முகாமிட்டு டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கார் வெடிப்பில் பலியான முபினும், அவனது கூட்டாளிகள் 17 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட ஏற்கனவே திட்டமிட்டு செயல்பட்ட திடுக்கிடும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முபினையும், அவனது கூட்டாளிகள் சிலரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து இருந்தனர்.
அப்போது முபின் மற்றும் கூட்டாளிகள் 17 பேரிடம் பாஸ்போர்ட் மற்றும் வெளிநாடு செல்வதற்கான விசாக்களும் இருந்து உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் போர் பயிற்சி மேற்கொள்ளும் இடங்களுக்கு சென்று இவர்களும் போர் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்து இருந்துள்ளனர்.
இந்த சதி திட்டம் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், மாநில உளவு பிரிவு போலீசாரும் முபினை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் அவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி இறந்து விட்டான். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கார் வெடிப்பு சம்பந்தமான அடுத்த கட்ட விசாரணையை அதிரடியாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக தமிழகம் முழுவதும் பதுங்கி உள்ள முபினின் கூட்டாளிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுககு சென்றும் விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்தனர்.
மாநில உளவு பிரிவு மற்றும் என்.ஐ.ஏ. விசாரணை வளையத்திற்குள் சென்ற பிறகும் முபின் ரகசியமாக செயல்பட்டு கார் வெடிப்பு சம்பவத்தை மிகவும் துணிச்சலாக அரங்கேற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து முபினிடம் தற்போது தொடர்பில் உள்ளவர்கள் ஏற்கனவே தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
ஐ.எஸ்.ஏ. பயங்கரவாத பயிற்சிக்கு திட்டமிட்ட 18 பேரில் முபின் மட்டும் உயிர் இழந்து இருக்கிறார். மீதமுள்ள 17 பேர் யார்? யார் அவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள். கார் குண்டு வெடிப்பிலும் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தற்போது கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முபினின் கூட்டாளிகள் 6 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கோவை போலீசார் கைதான 6 பேரில் 5 பேரை மட்டுமே காவலில் எடுத்து விசாரித்து இருந்தனர். இந்த நிலையில் தான் என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவர்களில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற உள்ளனர்.
இந்த விசாரணைக்கு பிறகு முபினுடன் வெளிநாடு சென்று பயங்கரவாத போர் பயிற்சி பெற திட்டமிட்ட 17 பேரின் தொடர்பு பற்றி தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டு பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து இது தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.