என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மயிலாப்பூர் 124வது வட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தி.மு.க.வில் இருந்து நீக்கம்- துரைமுருகன் நடவடிக்கை
- மெரினா போலீசார் கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி கவுன்சிலர் விமலா உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
- கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மயிலாப்பூர் பகுதி 124-வது வட்ட தி.மு.க. செயலாளர் ஆவார்.
சென்னை:
சென்னை சோழிங்க நல்லூரை சேர்ந்தவர் அமர்ராம். சென்னையில் அடகு கடை நடத்தி வரும் இவர் சமீபத்தில் மெரினா போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் அவர், 'நான் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் இருந்து நாவலூரில் 58 சென்ட் நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.25 கோடி என்பதால் நிலத்தை திருப்பி கேட்டு கிருஷ்ணமூர்த்தி என்னை மிரட்டி வந்தார்.
என்னை கடத்தி சென்று திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து என்னிடம் விற்ற நிலத்தை வலுக்கட்டாயமாக மீண்டும் எழுதி வாங்கி கொண்டனர். எனவே எனது நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறி இருந்தார்.
மெரினா போலீசார் கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி கவுன்சிலர் விமலா உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து கிருஷ்ண மூர்த்தியும், அவரது மனைவி கவுன்சிலர் விமலாவும் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்து முன் ஜாமீன் பெற்றனர்.
முன் ஜாமீன் உத்தரவு நகலுடன் கிருஷ்ணமூர்த்தியும், விமலாவும் நேற்று எழும்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன் ஜாமீன் உத்தரவு நகலில் அவர்கள் திருத்தங்கள் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால் கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி கவுன்சிலர் விமலா அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மயிலாப்பூர் பகுதி 124-வது வட்ட தி.மு.க. செயலாளர் ஆவார். அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை அறிந்ததும் தி.மு.க. மேலிடம் அவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தது. அவரை தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை தென்மேற்கு மாவட்டம், மயிலாப்பூர் கிழக்கு பகுதி, 124 அ-வது வடக்கு கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






