search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தே.மு.தி.க பொதுக்குழு-செயற்குழுவில் பிரேமலதா-பிரபாகரனுக்கு புதிய பதவிகள்
    X

    தே.மு.தி.க பொதுக்குழு-செயற்குழுவில் பிரேமலதா-பிரபாகரனுக்கு புதிய பதவிகள்

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார்.
    • விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி வருகின்றன.

    அந்த வகையில் தே.மு.தி.க.வும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறிய தே.மு.தி.க. தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது.

    தேர்தல் களத்தில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வரும் தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்கேற்ப முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தே.மு.தி.க. தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்துக்கான தேதி பொங்கலுக்கு பிறகு அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தே.மு.தி.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேதியை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அடுத்த வாரம் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை தொடர்ந்து இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள் இப்போதே மேற்கொண்டு வருகிறார்கள்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்கோளாறால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது மனைவி பிரேமலதாவே கட்சியை தொடர்ந்து வழி நடத்தி வருகிறார். தற்போது பொருளாளராக பதவி வகித்து வரும் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதையொட்டி தே.மு.தி.க.வில் செயல் தலைவர் பதவி என்கிற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதில் பிரேமலதா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் எந்த பொறுப்பும் இல்லாமல் கட்சியில் பணியாற்றி வருகிறார். அவரை இளைய கேப்டன் என கட்சியினர் அழைத்து வருகிறார்கள். தே.மு.தி.க.வில் இளைஞர் அணியில் விஜயபிரபாகரனுக்கு முக்கிய பதவியை வழங்குவது பற்றியும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ஏற்கனவே வெளியேறிவிட்ட தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கட்சி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×