search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்டெர்லைட்டை விட ஆபத்தானது என்.எல்.சி.- அன்புமணி ராமதாஸ் பேட்டி
    X

    ஸ்டெர்லைட்டை விட ஆபத்தானது என்.எல்.சி.- அன்புமணி ராமதாஸ் பேட்டி

    • நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும்.
    • 8 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் நெய்வேலி சுரங்கங்களால் இப்போது ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    சென்னை:

    நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் 2-வது சுரங்கத்தை விரிவாக்கும் பணியை நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    இந்த விரிவாக்கத்தால் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி அந்த பகுதியில் நிலங்களை சமன்படுத்தும் பணியை தொடங்கி உள்ளார்கள்.

    பொதுமக்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க. அழைப்பு விடுத்தது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

    நெய்வேலியில் விளைநில பகுதியில் நடத்தும் சுரங்க விரிவாக்கத்தால் அந்த பகுதி விவசாயம் முற்றிலும் அழிந்து பாலைவனமாகிவிடும்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சியால் பாதிப்புகள் அதிகம். கடலூர் மாவட்டத்தில் 8 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர் நெய்வேலி சுரங்கங்களால் இப்போது ஆயிரம் அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

    என்.எல்.சி.யால் காற்று மாசடைந்து ஆஸ்துமா போன்ற வியாதிகள் அதிகரித்துள்ளது. ஏற்கனவே என்.எல்.சி.க்கு நிலம் வழங்கியவர்கள் குடும்பத்தினருக்கு வேலை வழங்கவில்லை.

    கடலூரில் இன்று நடந்து வரும் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தாலும் அதனால் மகிழ்ச்சி அடையவில்லை. மக்கள் பாதிப்படைய வேண்டும் என்பதற்காக பா.ம.க. இந்த போராட்டத்தை நடத்தவில்லை. மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கவே இந்த போராட்டம்.

    இந்த பகுதியில் உள்ள விவசாயத்துறை அமைச்சரும், கடலூர் மாவட்ட கலெக்டரும் என்.எல்.சி.க்கு ஏஜெண்டுகளாக செயல்படுகிறார்கள்.

    எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க. இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்கி தனியாருக்கு கொடுக்க துடிப்பது ஏன்? இன்னும் ஒரு வருடத்தில் என்.எல்.சி. தனியார் மயம் ஆக்கப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குள் ஏன் இந்த அவசரம்.

    இது பா.ம.க.வின் பிரச்சினை அல்ல. எல்லா கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். சில கட்சியினர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். இந்த பிரச்சினை கடலூர் மாவட்ட பிரச்சினை மட்டுமல்ல. கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

    இன்று நடப்பது ஒரு அடையாள போராட்டம் தான். இன்னும் போராட்டம் தீவிரமாகும். இதை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×