search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மலை கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த அதிகாரிகள்- பாரம்பரிய நடனமாடி வரவேற்ற பழங்குடியின மக்கள்
    X

    அதிகாரிகளை பாரம்பரிய நடனமாடி வரவேற்ற பழங்குடியின மக்கள்.

    மலை கிராமங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த அதிகாரிகள்- பாரம்பரிய நடனமாடி வரவேற்ற பழங்குடியின மக்கள்

    • அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.
    • சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சிறக்காடு, சோலையூர் மேலப்பரவு, முந்தல், கொட்டகுடி பகுதிகளில் பழங்குடியின மக்களின் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு தேனி மாவட்ட ஆதிவாழ் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு வங்கி ( நபார்டு) சார்பாக பல்வேறு அடிப்படை வாழ்வாதார மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் ஆதிவாழ் பழங்குடி இன மக்கள் மேம்பாட்டு அலுவலர், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், வனத்துறை மற்றும்போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று பழங்குடி இன மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அரசு அதிகாரிகளை பழங்குடி இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடியும், வாத்தியங்கள் வாசித்தும் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளில் பழங்குடியின மக்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சுய உதவி குழுக்கள் மூலம் பெறப்படும் பல்வேறு நலன்கள், கல்வி திட்டங்கள், இன்சூரன்ஸ் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறக்காடு, மேலப்பரவு, சோலையூர், முந்தல், கொட்டகுடி ஆகிய பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பழங்குடியின மக்களுக்கு விலையில்லாத கன்றுடன் கூடிய கறவை மாடுகள், நபர் ஒன்றுக்கு ஆறு ஆடுகள் வீதம் சுமார் 150 பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

    மேலும் தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டு தொண்டு நிறுவனம் சார்பாக போடியில் உள்ள பள்ளிகளில் பயிலும் சிறக்காட்டில் இருந்து வரும் 45 மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆட்டோ கட்டணம் ரூ.10 ஆயிரம் வழங்கியும் சிறப்பு ஆசிரியர் கொண்டு கல்வி மேம்பாட்டு திட்டமும் கொண்டு வருவதாகவும் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×