search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இடிந்து விழும் நிலையில் போலீஸ் குடியிருப்புகள்-அச்சத்தில் காவலர் குடும்பத்தினர்
    X

    சென்னையில் இடிந்து விழும் நிலையில் போலீஸ் குடியிருப்புகள்-அச்சத்தில் காவலர் குடும்பத்தினர்

    • புகார் அளித்தால் தங்களுக்கு வேலையில் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
    • பழமையான கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    சென்னை:

    பொதுமக்களை காக்கும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகர காவல் துறையினர் வசித்து வரும் குடியிருப்புகள் இடிந்து விழுந்தும் நிலையில் இருக்கின்றன என்று போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

    சென்னையில் காவலர்கள் குடியிருப்புகள் பல இடங்களில் கட்டப்பட்டுள்ளது. அங்கு போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த குடியிருப்புகளில் பல ஆபத்தான முறையில் இடிந்து விடும் நிலையில் காணப்படுகிறது. கீழ்பாக்கத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர்கள் அங்கிருந்து காலி செய்யுமாறு அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரின் குடும்பப் பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மனு அளித்தனர். மாற்று இடம் ஒதுக்கி கொடுக்காமல் எங்களை காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கே செல்வோம்? எனவே உரிய குடியிருப்புகளை அடையாளம் காட்டிவிட்டு எங்கள் வீடுகளை காலி செய்ய சொல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். கீழ்ப்பாக்கம் குடியிருப்பை போன்றே சென்னையில் நரியன்காடு பழைய போலீஸ் குடியிருப்பு, புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பு ஆகியவையும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. ஆனால் இங்கு குடியிருக்கும் காவலர்கள் அது தொடர்பான புகார் மனுக்களை கொடுப்பதற்கு தயங்குவதாக கூறப்படுகிறது. அது போன்று புகார் அளித்தால் தங்களுக்கு வேலையில் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டு விடுமோ? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

    சென்னை மாநகரில் இதேபோன்று பல்வேறு போலீஸ் குடியிருப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த குடியிருப்புகளிலும் காவலர்களுக்கு தேவையான வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை என்பதே போலீசாரின் குற்றச்சாட்டாக உள்ளது. பழமையான இது போன்ற போலீஸ் குடியிருப்புகளை இடித்து விட்டு அதற்கு பதில் புதிய குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே காவலர்களின் கோரிக்கையாக உள்ளது. கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்டு காவலர்களின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்ட குடியிருப்புகளும் சில இடங்களில் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக காவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களும் ஒரு வித பயத்துடனேயே அங்கு குடியிருந்து வருகிறார்கள். சிலர் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாடகை வீடுகளில் தங்கி இருக்கிறார்கள். எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களின் குடும்பத்தை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உயர் அதிகாரிகள் போலீஸ் குடியிருப்புகளின் தரத்தை ஆய்வு செய்து பழமையான கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை ஒதுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×