search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தபால் ஓட்டு போடும் பணி திங்கட்கிழமை தொடங்குகிறது
    X

    சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தபால் ஓட்டு போடும் பணி திங்கட்கிழமை தொடங்குகிறது

    • சென்னையில் 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
    • வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர்.

    சென்னையில், உள்ள 39,01,167 வாக்காளர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். மொத்தம், 75,120 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதாக கூறி உள்ளனர். 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 366 பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களான 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட படிவம் 120-ன்படி வீட்டில் இருந்த படியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    மேற்படி நபர்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.

    வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களின் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு எந்த தேதியில் எந்த நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மூலம் வாக்காளர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கத்தினை அளித்து அதன்பேரில் அவர்களிடம் ரகசிய வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சென்னையிலும் திங்கட்கிழமை தபால் வாக்குகள் வீடு தேடி சென்று வாங்க உள்ளனர்.

    மேற்படி வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

    மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 மற்றும் படிவம் 12A ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதர மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன. இதர மாவட்டங்களில் பணிபுரிய உள்ள காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில் தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×