search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கும் சிறை கைதிகள்- குடும்பத்தினரிடம் பணம் வழங்கப்படுகிறது
    X

    மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கும் சிறை கைதிகள்- குடும்பத்தினரிடம் பணம் வழங்கப்படுகிறது

    • தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
    • கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் தண்டனை கைதிகளாக இருப்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியில் வருவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தமிழக அரசு செய்து வருகிறது.

    கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் பலர் வழக்கு விசாரணை முடிந்து சிறையில் தண்டனை காலத்தை கழித்து வருகிறார்கள்.

    இதுபோன்று தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.

    சிறைகளில் உள்ள தோட்டங்களில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணை வித்துக்களை பயிரிட்டு அறுவடை செய்வது, இந்த நிலக்கடலையை சிறையிலேயே செக்கு எண்ணையாக தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகள் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள்.

    இந்த பொருட்கள் சந்தை படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி மேற் பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.

    எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மதுரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தினமும் ரூ.1 லட்சம் அளவுக்கு பொருட்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.

    இப்படி சிறைச்சாலை அருகில் உள்ள சந்தைகள் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வர வேற்பை பெற்றுள்ளதால் சிறைகளில் உற்பத்தி அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தாங்கள் செய்யும் வேலையை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய சிறை கைதிகள் மாதம் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பாதிக்கிறார்கள்.

    கைதிகள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுவதால் ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என சம்பாதிக்கப்பவர்களும் உண்டு. சிறையில் தரமான சாப்பாடு உள்ளிட்டவைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் இந்த சம்பளம் கைதிகளுக்கு மிச்சமாகி விடுகிறது.

    கைதிகள் சம்பாதிக்கும் இந்த பணம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படுவது இல்லை. இதுபோன்ற சம்பள பணத்தை கையாள்வதற்கே கணக்கர் ஒருவர் சிறைச்சாலைகளில் உள்ளார். அவர் கைதிகள் சம்பள பணத்தை பத்திரமாக வைத்திருந்து குடும்பத்தினர் பார்க்க வரும்போது அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.

    இதன்மூலம் சிறையில் இருந்தாலும் கைதிகள் தங்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து கொடுக்கும் நிலையில் இருந்து வேலைகளை செய்து வருவது அவர்களை மனதளவில் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு உந்து சக்தியாகவே இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×