search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமஜெயம் கொலையில் மர்மம் விலகுமா?- ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கியது

    • மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
    • சோதனை நடைபெற்ற தடயவியல் துறை அலுவலகத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வந்திருந்தார்.

    சென்னை:

    அமைச்சர் நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை. இதனால் ராமஜெயம் கொலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் நீடிக்கிறது.

    அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது தொடர்பாக எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகாமலேயே உள்ளது.

    ராமஜெயம் கொலை தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மாநில போலீசாரே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து அப்போது தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் புதிய விசாரணை குழு ராமஜெயம் கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதில் டி.எஸ்.பி. மதன் உள்ளிட்ட காவலர்கள் இடம் பெற்றனர். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவினர் தங்களது விசாரணையை தொடங்கினர்.

    பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டவர் என்ற முறையிலும், ரவுடிகள் ஒழிப்பு படை பிரிவில் பணியாற்றியவர் என்ற முறையிலும் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்தது.

    தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ரவுடிகளின் மீது போலீசாரின் சந்தேக பார்வை விழுந்தது. காலையில் நடைபயிற்சி சென்ற போதுதான் ராமஜெயம் திட்டம் போட்டு கடத்தி கொல்லப்பட்டார்.

    இதையடுத்து அதே பாணியில் இதற்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவங்கள், அதில் ஈடுபட்ட ரவுடிகள் பற்றிய பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் உள்பட 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு கோர்ட்டில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். இதன்படி திருச்சி மாஜிஸ்திரேட்டு அதற்கான அனுமதியை அளித்தார்.

    இதன்படி திண்டுக்கல் மோகன்ராமன், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்யா ஆகிய 4 ரவுடிகளிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

    அவர்கள் 4 பேரும் இன்று காலை 10 மணி அளவில் தடயவியல் துறை அலுவலகத்துக்கு வக்கீல்களுடன் வந்து காரில் இறங்கினார்கள். இவர்கள் 4 பேருடன் தலா ஒரு வக்கீல் தடயவியல் துறை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. இதற்காக டெல்லியில் இருந்து தடயவியல் நிபுணர் மோகன் தலைமையில் 2 அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

    இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை 4 நாட்கள் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறும் நிலையில் மற்ற 8 ரவுடிகளுக்கும் அடுத்தடுத்த நாட்களில் தடயவியல் சோதனை நடத்தப்பட உள்ளது.

    இந்த சோதனை முடிவில் ராமஜெயம் கொலை வழக்கில் இவர்கள் யாருக்காவது தொடர்பு இருந்தால் அது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை நடைபெற்ற தடயவியல் துறை அலுவலகத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வந்திருந்தார்.

    Next Story
    ×